நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளை அகற்ற வேண்டும்: தமிழ்நாடு வணிகர் சங்க கூட்டத்தில் தீர்மானம்
ஜி.எஸ்.டி.யால் மத்திய அரசுக்கு கூடுதல் வருவாய் கிடைப்பதால் நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளை அகற்ற வேண்டும் என தமிழ்நாடு வணிகர் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஈரோடு,
ஜி.எஸ்.டி.யால் மத்திய அரசுக்கு கூடுதல் வருவாய் கிடைப்பதால் நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளை அகற்ற வேண்டும் என்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் வணிகர் தினத்தை முன்னிட்டு வருகிற மே மாதம் 5-ந் தேதி இந்திய வணிகர் உரிமை மீட்பு மாநாடு சென்னையில் நடத்தப்படும் என்று பேரமைப்பு தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா அறிவித்து உள்ளார். இந்த மாநாட்டில் கலந்துகொள்வது தொடர்பான நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் ஈரோடு கருங்கல்பாளையம் கண்ணையன் வீதியில் உள்ள பேரமைப்பின் மாவட்ட அலுவலகத்தில் நேற்று நடந்தது.
கூட்டத்துக்கு பேரமைப்பின் மாவட்ட தலைவர் ஆர்.எம்.தேவராஜா தலைமை தாங்கினார். மாநில இணை பொதுச்செயலாளர் என்.சிவநேசன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். அதைத்தொடர்ந்து கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-
* சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி.) கணக்கு தாக்கல் என்பது ஆங்கில மொழியில் மட்டுமல்லாது, மாநில வாரியான மொழிகளில் தாக்கல் செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
* தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளை அகலப்படுத்தும்போது பாதிக்கப்படுகின்ற நில மற்றும் கட்டிட உரிமையாளர்களுக்கு இழப்பீடு வழங்குவதுபோல் மேற்படி இடங்களில் நீண்டகாலமாக வணிகம் செய்து வருபவர்களுக்கும் இழப்பீடு வழங்கவேண்டும்.
* உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய சட்டத்தில் பதிவு செய்வதற்கான விற்பனை வரம்பை ரூ.12 லட்சத்தில் இருந்து ரூ.25 லட்சமாக உயர்த்த வேண்டும். மேலும் உணவு பாதுகாப்பு தரச்சட்டத்தில் கூறப்பட்டு உள்ள தண்டனை பிரிவுகளை மீண்டும் மறு ஆய்வு செய்து வணிகர்களின் நலன்களை காக்க ஆவன செய்ய வேண்டும்.
* 60 வயதை கடந்த மூத்த வணிகர்களுக்கு அரசு ஓய்வூதியம் வழங்க வேண்டும். வணிக நிறுவனங்களை 24 மணி நேரமும் இயக்க சட்ட திருத்தங்கள் கொண்டு வரவேண்டும்.
* ஈரோடு மாநகரின் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க புறவழிச்சாலை உடனடியாக திறக்கப்பட வேண்டும். பொது சுத்திகரிப்பு நிலையம் அமைத்து சாய, சலவை கழிவுகள் நீர்நிலைகளில் கலக் காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பால் மத்திய அரசுக்கு கூடுதல் வருவாய் கிடைப்பதால் நெடுஞ்சாலைகளில் உள்ள அனைத்து சுங்கச்சாவடிகளையும் அகற்ற வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் மாவட்ட செயலாளர் ஆர்.கே.சண்முகவேல், பொருளாளர் கே.ராஜகோபால், மாநகர தலைவர் மகாராஜன், செயலாளர் அந்தோனி யுஜின், பொருளாளர் சாதிக்பாட்ஷா மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டார்கள்.
Related Tags :
Next Story