காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி ரெயில்-சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி ரெயில் மற்றும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.
ஈரோடு,
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்ற சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவை நிறைவேற்றக்கோரி தமிழகம் முழுவதும் அனைத்து கட்சியினர் பல்வேறு போராட்டங்கள் நடத்தி வருகிறார்கள். இந்த கோரிக்கையை வலியுறுத்தி பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் முழு அடைப்பு போராட்டம் மற்றும் ரெயில் மறியல் மற்றும் சாலை மறியல் போராட்டங்கள் நடைபெறும் என்று கட்சி சார்பில் அறிவிக்கப்பட்டது. விவசாயிகள் உள்பட அனைத்து தரப்பினரும் இந்த போராட்டத்தில் கலந்து கொள்ளவும் பாட்டாளி மக்கள் கட்சி நிர்வாகிகள் அழைப்பு விடுத்தனர்.
அதன்படி நேற்று போராட்டம் நடந்தது. ஈரோடு மாவட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் ரெயில் மறியல் போராட்டம் நடந்தது. போராட்டத்துக்கு கீழ்பவானி முறைநீர் பாசன சங்க தலைவர் காசியண்ணன் தலைமை தாங்கினார். போராட்டக்குழுவினர் ஈரோடு காளை மாடு சிலை அருகே பழைய ரெயில்நிலையம் ரோடு பகுதியில் இருந்து ஊர்வலமாக ரெயில் நிலையத்தை நோக்கி வந்தனர். மத்திய அரசுக்கு எதிராகவும், பிரதமர் மோடியை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.
ஊர்வலத்தில் கீழ்பவானி முறைநீர் பாசன சங்க செயலாளர் வடிவேல், கீழ்பவானி பாசன விவசாயிகள் சங்க தலைவர் செ.நல்லசாமி, பா.ம.க. மாநில துணை பொதுச்செயலாளர் பொ.வை.ஆறுமுகம், துணைத்தலைவர் என்.ஆர்.வடிவேல், மாவட்ட நிர்வாகிகள் வெங்கடாசலம், கிருபாகரன், முத்துக்குமார், நடராஜ், செல்வராஜ், மாநில நிர்வாகிகள் கோபால், செந்தில் உள்பட பலர் கலந்து கொண்டு கோஷங்கள் எழுப்பினார்கள்.
ரெயில் நிலையத்துக்குள் அவர்கள் நுழைந்தபோது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த ஈரோடு மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சந்தனபாண்டியன், டவுன் துணை போலீஸ் சூப்பிரண்டு வி.ராதாகிருஷ்ணன், இன்ஸ்பெக்டர்கள் ராஜகுமார், அமுதா மற்றும் போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினார்கள்.
ரெயில் நிலையத்துக்குள் செல்ல அனுமதி இல்லை என்று கூறி கைது செய்வதாக அறிவித்தனர். ஆனால் போராட்டக்குழுவினர் ரெயில் நிலையத்துக்கு முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அனைவரையும் போலீசார் கைது செய்தனர்.
இதற்கிடையே பாட்டாளி மக்கள் கட்சி மாநில துணை பொதுச்செயலாளர் எஸ்.எல்.பரமசிவம் தலைமையில் சிலர் போலீசாருக்கு தெரியாமல் ரெயில் நிலையத்துக்குள் சென்றனர். அவர்கள் 3-வது பிளாட்பாரத்தில் நின்ற கோவை-நாகர்கோவில் பயணிகள் ரெயில் என்ஜின் மீது ஏறி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு, மத்திய அரசு மற்றும் பிரதமர் மோடியை கண்டித்து கோஷங்கள் எழுப்பினார்கள். இதுபற்றி தகவல் அறிந்த ரெயில்வே போலீசார், ரெயில்வே பாதுகாப்பு படை போலீஸ் இன்ஸ்பெக்டர் வீ.கே.மீனா, மொடக்குறிச்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் சேகர் ஆகியோர் விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட 11 பேரை கைது செய்தனர். ஆக மொத்தம் ஈரோடு ரெயில் நிலையத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட பாட்டாளி மக்கள் கட்சி போராட்டக்குழுவினர் 7 பெண்கள் உள்பட 245 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் அருகில் உள்ள திருமண மண்டபத்துக்கு கொண்டு செல்லப்பட்டனர். பின்னர் அனைவரும் மாலையில் விடுதலை செய்யப்பட்டனர். ரெயில் மறியல் காரணமாக ரெயில் போக்குவரத்தில் எந்த பாதிப்பும் இல்லை.
நேற்று பாட்டாளி மக்கள் கட்சியினர் போராட்டம் அறிவித்து இருந்ததையொட்டி ஈரோடு தலைமை தபால் நிலையம், வருமான வரி அலுவலகம் ஆகியவற்றுக்கும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
இதேபோல் காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் ரெயில் நிலையத்தை முற்றுகையிடும் போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. அதன்படி கட்சியின் பொறுப்புக்குழு தலைவர் எக்சான் தலைமையில் மாநில துணைப்பொதுச்செயலாளர் சையத் அகமத்பாரூக், துணை செயலாளர் பாபு ஷாகின்ஷா மற்றும் கட்சியினர் பலர் ஈரோடு காளை மாட்டு சிலை பகுதியில் நேற்று மாலை திரண்டனர்.
அவர்கள் கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பியவாறு ஈரோடு ரெயில் நிலையத்தை நோக்கி ஊர்வலமாக நடந்து சென்றனர். ரெயில் நிலையத்தின் உள்ளே நுழைய முயன்றபோது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த ஈரோடு டவுன் துணை போலீஸ் சூப்பிரண்டு ராதாகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினார்கள்.
அப்போது போராட்டம் நடத்த அனுமதி கிடையாது என்று கூறிய போலீசார், போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்து போலீஸ் வேனில் ஏற்றினார்கள். இதில் மனிதநேய ஜனநாயக கட்சியினர் 40 பேர் கைது செய்யப்பட்டு ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர்.
ஆதித்தமிழர் பேரவை சார்பில் ஈரோடு காளைமாட்டு சிலை பகுதியில் நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட செயலாளர் வீரக்குமார் தலைமை தாங்கினார். மாவட்ட பொறுப்பாளர்கள் ராமகிருஷ்ணன், சதீஸ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆதித்தமிழர் பேரவை நிறுவனர் அதியமான், பொதுச்செயலாளர் நாகராசன், தி.மு.க. மாநகர செயலாளர் சுப்பிரமணி ஆகியோர் கலந்துகொண்டு பேசினார்கள். இதில் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.
ஆர்ப்பாட்டத்தில் திருப்பூர் மாவட்ட செயலாளர் சோழன், நீதி செயலாளர் பெருமாவளவன், தலைமை நிலைய செயலாளர் ஆனந்தன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
இதேபோல் பவானியில் சாலை மறியல் போராட்டம் நடத்திய பா.ம.க. வினர் 185 பேரை போலீசார் கைது செய்தார்கள். இது தவிர காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி கோபி, சத்தியமங்கலத்திலும் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
Related Tags :
Next Story