ஒரு கிலோ தங்கம் தருவதாக கூறி தொழில்அதிபரிடம் ரூ.15 லட்சம் மோசடி; 2 பேர் கைது


ஒரு கிலோ தங்கம் தருவதாக கூறி தொழில்அதிபரிடம் ரூ.15 லட்சம் மோசடி; 2 பேர் கைது
x
தினத்தந்தி 12 April 2018 3:06 AM IST (Updated: 12 April 2018 3:06 AM IST)
t-max-icont-min-icon

பெங்களூரு அருகே ஒரு கிலோ தங்கம் தருவதாக கூறி, தொழில்அதிபரிடம் ரூ.15 லட்சம் பெற்று மோசடி செய்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

பெங்களூரு, 

பெங்களூரு அருகே ஒரு கிலோ தங்கம் தருவதாக கூறி, தொழில்அதிபரிடம் ரூ.15 லட்சம் பெற்று மோசடி செய்த 2 பேரை போலீசார் கைது செய்தனர். இதற்காக கடத்தல் நாடகமாடியதும் அம்பலமாகி உள்ளது.

ஒரு கிலோ தங்கம் தருவதாக...

பெங்களூரு புறநகர் ஆவலஹள்ளியை சேர்ந்தவர் தியாகராஜன். தொழில்அதிபர். இவருடைய செல்போனுக்கு ஒரு நபர் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது அவர் தன்னிடம் ஒரு கிலோ எடை கொண்ட தங்கம் இருப்பதாகவும், அதனை ரூ.15 லட்சத்திற்கு விற்பனை செய்ய இருப்பதாகவும் கூறினார். இதை கேட்ட தியாகராஜன் ஒரு கிலோ தங்கத்தையும் தானே வாங்கி கொண்டு ரூ.15 லட்சம் தருவதாக சொன்னார். இதற்கு மர்மநபரும் சம்மதம் தெரிவித்தார். அத்துடன் கடந்த மாதம் (மார்ச்) 1-ந் தேதி இரவு பெங்களூரு புறநகர் கித்தகானூர் பகுதிக்கு பணத்துடன் வரும்படி தியாகராஜனிடம் மர்மநபர் கூறினார்.

அதன்படி, அவரும் அங்கு சென்றார். அப்போது தியாகராஜனிடம் இருந்து ரூ.15 லட்சத்தை முதலில் பெற்றுக்கொண்ட மர்மநபர், தனது வீடு அருகில் இருப்பதாகவும், அங்கு வந்து தங்கத்தை வாங்கி கொள்ளும்படி கூறினார். பின்னர் 2 பேரும் அங்கிருந்து நடந்து சென்றார்கள். அப்போது அங்கு காரில் வந்த ஒரு கும்பல், மர்மநபரை அடித்து உதைத்து தாக்கியதுடன், ரூ.15 லட்சத்துடன் அவரை காரில் ஏற்றி கடத்தி சென்று விட்டனர். அதன்பிறகு, தியாகராஜனால் மர்மநபரை தொடர்பு கொள்ள முடியாமல் போனது. இதுகுறித்து ஆவலஹள்ளி போலீஸ் நிலையத்தில் நடந்த சம்பவங்களை கூறி தியாகராஜன் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

2 பேர் கைது

போலீஸ் விசாரணையில், தியாகராஜனிடம் ஒரு கிலோ தங்கம் தருவதாக கூறிய மர்மநபர் தான் திட்டமிட்டு ரூ.15 லட்சம் பெற்று மோசடி செய்ததுடன், ஒரு கிலோ தங்கத்தை கொடுக்காமல் இருக்க கடத்தல் நாடகமாடியதும் தெரியவந்தது. இதையடுத்து, மோசடி கும்பலை பிடிக்க போலீசார் நடவடிக்கை எடுத்து வந்தனர். இந்த நிலையில், போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில் தியாகராஜனிடம் ரூ.15 லட்சம் பெற்று மோசடி செய்ததாக ஆந்திர மாநிலத்தை சேர்ந்த வெங்கடேஷ், சந்திரா ஆகிய 2 பேரையும் கைது செய்து விசாரித்தனர். அப்போது வெங்கடேஷ் தான் கடந்த மாதம் (மார்ச்) 1-ந் தேதி தியாகராஜனை சந்தித்து தங்கம் தருவதாக கூறி ரூ.15 லட்சம் பெற்றிருந்தார்.

மேலும் தியாகராஜனிடம் பல லட்சம் ரூபாய் இருப்பதை ஏற்கனவே அறிந்திருந்த வெங்கடேஷ், அவருக்கு குறைந்த விலையில் ஒரு கிலோ தங்கம் தருவதாக கூறி ரூ.15 லட்சத்தை மோசடி செய்ய திட்டமிட்டுள்ளார். அதன்படி ஒரு கிலோ தங்கம் தருவதாக கூறி ரூ.15 லட்சத்தை மோசடி செய்துவிட்டு, இதை மறைக்க வெங்கடேஷ், சந்திரா உள்ளிட்ட 6 பேருடன் சேர்ந்து கடத்தல் நாடகத்தை அரங்கேற்றியதையும் வெங்கடேஷ் ஒப்புக்கொண்டார்.

ரூ.6 லட்சம் பறிமுதல்

கைதான வெங்கடேஷ், சந்திரா ஆகியோரிடம் இருந்து ரூ.6 லட்சம் மற்றும் ஒரு கார் பறிமுதல் செய்யப்பட்டது. கைதான 2 பேர் மீதும் ஆவலஹள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த சம்பவத்தில் தொடர்புடைய வெங்கடேசின் கூட்டாளிகள் 5 பேரை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.

Next Story