காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய -மாநில அரசுகளை கண்டித்து ஈரோட்டில் இன்று டி.டி.வி. தினகரன் தலைமையில் ஆர்ப்பாட்டம்
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய-மாநில அரசுகளை கண்டித்து ஈரோட்டில் இன்று டி.டி.வி. தினகரன் தலைமையில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தினர் திரளாக கலந்து கொள்ள வேண்டுகோள் விடுக்கப்பட்டு உள்ளது.
ஈரோடு,
காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு உடனடியாக அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் அனைத்து அரசியல் கட்சிகள், பொது அமைப்பினர், விவசாய சங்கத்தினர் மற்றும் பொதுமக்கள் போராட்டங்கள் நடத்தி வருகிறார்கள்.
இதுபோல் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் பல்வேறு போராட்டங்கள் அறிவிக்கப்பட்டு கட்சியின் துணைப்பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் எம்.எல்.ஏ. தலைமையில் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. முதல் கட்டமாக தஞ்சையில் உண்ணாவிரத போராட்டம் நடந்தது. பின்னர் திருச்சியில் விமானநிலையம் முற்றுகை போராட்டம் நடந்தது. அதைத்தொடர்ந்து 3-வது கட்டமாக காவிரி பாயும் மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அறிவித்து கடந்த 7-ந் தேதி முதல் ஆர்ப்பாட்டம் நடந்து வருகிறது.
அதன்படி இன்று (வியாழக்கிழமை) ஈரோடு மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடக்கிறது. ஈரோடு வீரப்பன்சத்திரம் பஸ்நிறுத்தத்தில் நடக்கும் இந்த ஆர்ப்பாட்டத்துக்கு அ.ம.மு.க. துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ. தலைமை தாங்குகிறார். முன்னாள் அமைச்சரும், கொங்கு மண்டல பொறுப்பாளருமான செந்தில்பாலாஜி முன்னிலை வகிக்கிறார்.
மாநில நிர்வாகிகள் வி.பி.கலைராஜன், தங்க தமிழ்ச்செல்வன், முன்னாள் அமைச்சர் பழனியப்பன் உள்பட பலர் கலந்து கொள்கிறார்கள். ஏற்பாடுகளை மாநில மாணவர் அணி இணை செயலாளர் எம்.பிரபு, ஈரோடு மாநகர் மாவட்ட செயலாளர் பருவாச்சி பரணீதரன், புறநகர் மாவட்ட செயலாளர் எஸ்.ஆர்.செல்வம் ஆகியோர் செய்து வருகிறார்கள்.
இதுபற்றி மாநில மாணவர் அணி இணைச்செயலாளர் எம்.பிரபு கூறியதாவது:-
அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் கட்சி தொடங்கப்பட்ட பின்னர், துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தலைமையில் ஈரோட்டில் முதன் முதலாக போராட்டம் நடைபெறுகிறது. தமிழக மக்களின் ஒட்டு மொத்த நீர் ஆதாரமாக விளங்கும் காவிரி தண்ணீரில் தமிழர்களின் உரிமையை கேட்கும் இந்த போராட்டத்தில் விவசாயிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் திரளாக கலந்து கொள்ள வேண்டும். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. அதற்கான காலக்கெடுவையும் நிர்ணயித்தது. ஆனால் தமிழக மக்களையும், விவசாயத்தையும் பற்றி அக்கறை இல்லாத மத்திய அரசும், அந்த அரசுக்கு துணைபோகும் தமிழக அரசையும் கண்டித்து நடைபெறும் இந்த உரிமை போராட்டத்தில் மத்திய -மாநில அரசுகளுக்கு எதிர்ப்பை காட்டும் வகையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தினர் திரளாக கலந்து கொள்ள கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story