திரு.வி.க.நகரில் வீடு புகுந்து 20 பவுன் நகை திருடிய அண்ணன்-தம்பி உள்பட 3 பேர் கைது
திரு.வி.க.நகரில் வீடு புகுந்து 20 பவுன் நகைகளை திருடிய அண்ணன்-தம்பி உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
திரு.வி.க.நகர்,
சென்னை திரு.வி.க. நகர் ராஜவேலு தெருவில் வசித்து வருபவர் மீனாட்சி (வயது 48). இவருடைய கணவர் முத்துசாமி. இவர், உடல்நிலை சரியில்லாமல் வீட்டில் உள்ளார். இவர்களுக்கு மணிகண்டன் (23), மாதவன் (14) என 2 மகன்கள் உள்ளனர்.
மூத்த மகன் மணிகண்டன், தற்போது பெங்களூருவில் வேலை செய்து வருகிறார். அவரை வேலைக்காக அமெரிக்கா அனுப்பி வைக்கும் முயற்சியில் ஈடுபட்டு உள்ள மீனாட்சி, இதற்காக வங்கியில் அடமானம் வைத்து பணம் பெறுவதற்காக வீட்டில் 20 பவுன் நகைகள் வைத்து இருந்தார்.
சம்பவத்தன்று மீனாட்சி கோவிலுக்கு சென்று விட்டார். வீட்டில் அவரது 2-வது மகன் மாதவன், முத்துசாமி மட்டும் இருந்தனர். அப்போது 3 மர்மநபர்கள் நைசாக அவரது வீட்டுக்குள் புகுந்து, மாதவன், முத்துசாமி இருவரையும் ஏமாற்றி பூஜை அறையில் இருந்த 20 பவுன் நகைகளை திருடிச்சென்று விட்டனர்.
3 பேர் கைது
இது குறித்து திரு.வி.க. நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் தமிழ்வாணன் வழக்குப்பதிவு செய்து, சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு மர்ம நபர்கள் 3 பேரையும் தேடி வந்தனர்.
இந்த நிலையில் ராமநாதபுரம் மாவட்டம் கோவிந்தமங்களம் பகுதியை சேர்ந்த காளிமுத்து என்பவரின் முதல் மனைவி மகன் சுரேஷ் (30), 2-வது மனைவியின் மகன் செந்தில் (20) மற்றும் அதே பகுதியை சேர்ந்த அஜித் (21) ஆகிய 3 பேர்தான் வீடு புகுந்து நகை திருடியது தெரிந்தது. தற்போது அவர்கள் ராமநாதபுரத்தில் பதுங்கி இருப்பதும் தெரிந்தது.
இதையடுத்து அங்கு சென்ற போலீசார், 3 பேரையும் மடக்கி பிடித்து கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 20 பவுன் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது. கைதான 3 பேரையும் சென்னை அழைத்து வந்த போலீசார், சிறையில் அடைத்தனர்.
Related Tags :
Next Story