பிரபல கடையின் போலி ‘லெட்டர் பேடு’, ‘சீல்’ தயாரித்து ரூ.3½ லட்சம் மருந்துகள் வாங்கி மோசடியில் ஈடுபட்ட 2 பேர் கைது


பிரபல கடையின் போலி ‘லெட்டர் பேடு’, ‘சீல்’ தயாரித்து ரூ.3½ லட்சம் மருந்துகள் வாங்கி மோசடியில் ஈடுபட்ட 2 பேர் கைது
x
தினத்தந்தி 12 April 2018 4:12 AM IST (Updated: 12 April 2018 4:12 AM IST)
t-max-icont-min-icon

பிரபல மருந்து கடையின் போலி ‘லெட்டர் பேடு’, ‘சீல்’ தயாரித்து ரூ.3½ லட்சம் மோசடியில் ஈடுபட்ட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

பூந்தமல்லி, 

மதுரவாயல் ஆலப்பாக்கம் மெயின்ரோடு சுந்தர் நகர் பகுதியில் மருந்துகளை மொத்தமாக விற்பனை செய்யும் தனியாருக்கு சொந்தமான குடோன் உள்ளது. இங்கு மேலாளராக வேலை செய்து வருபவர் கார்த்திகேயன் (வயது 31).

கடந்த சில தினங்களுக்கு முன்பு மேலாளர் கார்த்திகேயனுக்கு ஒரு செல்போன் அழைப்பு வந்தது. அதில் பேசியவர், சென்னை கே.கே.நகரில் உள்ள பிரபல மருந்து கடையில் இருந்து பேசுவதாக கூறினார்.

பின்னர் தங்களுக்கு வேண்டிய மருந்துகளை ‘ஆர்டர்’ கொடுத்தார். அந்த மருந்துகளை எடுத்து செல்ல ஊழியர்களை அனுப்பி வைப்பதாகவும், அதற்கான பணத்தை மாலையில் கடையில் வந்து வாங்கி செல்லுமாறும் கூறிவிட்டு இணைப்பை துண்டித்து விட்டார்.

ரூ.3½ லட்சம் மருந்துகள்

சிறிதுநேரத்தில் அந்த குடோனுக்கு வந்த 2 பேர், குறிப்பிட்ட அந்த மருந்து கடையின் ‘சீல்’ போட்ட ‘லெட்டர் பேடை’ கொடுத்துவிட்டு, ரூ.3½ லட்சம் மதிப்பிலான மருந்துகளை எடுத்துச்சென்று விட்டனர்.

மாலையில் அந்த மருந்துக்கான தொகையை வாங்க குறிப்பிட்ட அந்த மருந்து கடைக்கு சென்று கேட்டபோது, தாங்கள் அப்படி எதுவும் மருந்துகள் ‘ஆர்டர்’ செய்யவில்லை என்றும், அந்த ‘லெட்டர் பேடு’ தங்களுடையது இல்லை என்றும் தெரிவித்தனர்.

அப்போதுதான் தான் ஏமாற்றப்பட்டு இருப்பது குடோன் மேலாளர் கார்த்திகேயனுக்கு தெரியவந்தது. இது குறித்து அவர் மதுரவாயல் போலீசில் புகார் அளித்தார்.

2 பேர் கைது

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அந்த குடோனில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆராய்ந்தனர். பின்னர் அந்த காட்சிகளில் பதிவான உருவங்கள் மற்றும் குடோன் மேலாளரின் செல்போனில் பேசிய மர்மநபரின் செல்போன் எண் ஆகியவற்றை வைத்து விசாரணை மேற்கொண்டனர்.

இதையடுத்து சென்னை புரசைவாக்கத்தை சேர்ந்த சஞ்சய்குமார் (40), சீனிவாசன் (32) ஆகிய 2 பேரை பிடித்து விசாரித்தனர். அதில் அவர்கள்தான், போன் மூலம் மருந்துகள் ‘ஆர்டர்’ கொடுத்ததும், குடோன் மேலாளர் நம்ப வேண்டும் என்பதற்காக குறிப்பிட்ட மருந்து கடையின் போலியான ‘லெட்டர் பேடில்’ கையெழுத்து, ‘சீல்’ உள்ளிட்டவைகளை தயார் செய்து கொடுத்து ரூ.3½ லட்சம் மதிப்புள்ள மருந்துகளை வாங்கி மோசடியில் ஈடுபட்டதையும் ஒப்புக்கொண்டனர்.

அந்த மருந்துகளை பல்வேறு இடங்களில் விற்பனை செய்து உள்ளனர். இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.1.40 லட்சத்தை பறிமுதல் செய்த போலீசார், இருவரையும் சிறையில் அடைத்தனர். மேலும் இவர்கள் வேறு எங்காவது இதுபோன்ற குற்ற செயல்களில் ஈடுபட்டு உள்ளார்களா? எனவும் போலீசார் விசாரித்து வருகின்றனர். 

Next Story