நியூட்ரினோ ஆய்வு மையத்துக்கு எதிர்ப்பு: அ.ம.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு
நியூட்ரினோ ஆய்வு மையத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பாக ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக தங்கதமிழ்செல்வன் கூறியுள்ளார்.
உத்தமபாளையம்,
தேனி மாவட்டம் தேவாரம் அடுத்துள்ள அம்பரப்பர் மலையில் அமைய உள்ள நியூட்ரினோ ஆய்வு மையத்துக்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் அம்பரப்பர் மலையை, அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் கொள்கை பரப்பு செயலாளர் தங்கதமிழ்செல்வன் நேற்று மாலை பார்வையிட்டார். இதைத்தொடர்ந்து டி.புதுக்கோட்டை, பொட்டிப்புரம், ராமகிருஷ்ணபுரம் ஆகிய கிராம மக்களை சந்தித்தார்.
அதன்பின்னர் அவர் நிருபர்களிடம் கூறும்போது, தமிழகத்தை வஞ்சிக்கும் திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் மத்திய அரசின் ஏஜென்டுகளாக செயல்படுகின்றனர். நியூட்ரினோ ஆய்வு மையத்தை மத்திய அரசு ஏன் குஜராத் மாநிலத்தில் தொடங்கவில்லை. மக்களை பாதிக்கும் எந்தவொரு திட்டத்தையும் ஏற்றுக்கொள்ள மாட்டோம். இதனால் அ.ம.மு.க. சார்பில் துணை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் தலைமையில் பொட்டிப்புரத்தில் விரைவில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். இதில் ஒரு லட்சம் பேர் கலந்து கொள்வார்கள். இந்த திட்டத்தை கைவிடும் வரை எங்களது போராட்டம் தொடரும் என்றார்.
Related Tags :
Next Story