சரக்கு ஆட்டோ மோதி கணவன், மனைவி பலி 10 பேர் படுகாயம்
சரக்கு ஆட்டோ மோதியதில் கணவன், மனைவி பலியானார்கள். 10 பேர் படுகாயம் அடைந்தனர்.
பள்ளிப்பட்டு,
வேலூர் மாவட்டம் பெருமாள்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது 60). இவரது மனைவி முனியம்மாள் (55). இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் திருவள்ளூர் மாவட்டம் புதூர்மேடு என்ற இடத்தில் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தனர். அப்போது பின்னால் வந்த சரக்கு ஆட்டோ நிலைதடுமாறி கணவன், மனைவி சென்றுகொண்டிருந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. அதன் பின்னர் அந்த சரக்கு ஆட்டோ எதிரே வந்து கொண்டிருந்த டிராக்டர் மீது மோதியது.
இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் சென்ற சுப்பிரமணி, அவரது மனைவி முனியம்மாள் படுகாயம் அடைந்து அதே இடத்தில் பரிதாபமாக இறந்தனர்.
10 பேர் படுகாயம்
டிராக்டரில் வந்த கூலித்தொழிலாளர்களான ஆந்திர மாநிலம் பங்காருபாளையத்தை சேர்ந்த ரமேஷ் (40), சங்கரய்யா (47), சுப்பிரமணியராஜு (61), அயிலப்பா (65), சாந்தம்மாள் (50), கணேஷ் (60), செல்வராஜ் (61), சரக்கு ஆட்டோவில் வந்த சோளிங்கரை சேர்ந்த மோடி (20), குணசேகரன் (30) மேலும் ஒருவர் என 10 பேர் படுகாயம் அடைந்தனர்.
இது குறித்து ஆர்.கே. பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story