காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி பா.ம.க.வினர் சாலைமறியல், ஆர்ப்பாட்டம்


காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி பா.ம.க.வினர் சாலைமறியல், ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 12 April 2018 4:26 AM IST (Updated: 12 April 2018 4:26 AM IST)
t-max-icont-min-icon

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி பா.ம.க.வினர் சாலைமறியல் மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

படப்பை,

பா.ம.க. சார்பில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததை கண்டித்து படப்பை பஜார் வீதியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு குன்றத்தூர் வடக்கு ஒன்றிய பா.ம.க செயலாளர் தேவேந்திரன் தலைமை தாங்கினார்.

மாவட்ட துணை தலைவர் சீனிவாசன், மாவட்ட துணை செயலாளர் ஜெயகாந்தன், தெற்கு ஒன்றிய செயலாளர் பாஸ்கர சேதுபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

போக்குவரத்து நெரிசல்

பின்னர் திடீரென அங்கிருந்து ஊர்வலமாக புறப்பட்டு வண்டலூர்-வாலாஜாபாத் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது அவர்கள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து கோஷமிட்டனர். இதனால் அந்த பகுதியில் 1 மணி நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதையடுத்து சாலை மறியலில் ஈடுபட்ட 300-க்கும் மேற்பட்டோரை மணிமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அசோகன் தலைமையிலான போலீசார் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.

செங்கல்பட்டு

மத்திய அரசை கண்டித்தும் காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க வலியுறுத்தியும் பா.ம.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் காஞ்சீபுரம் மாவட்ட செயலாளர் பி.வி.கே.வாசு தலைமை தாங்கினார்.

வன்னியர் சங்க மாவட்ட துணை தலைவர் கணேசமூர்த்தி, காஞ்சீபுரம் கிழக்கு மாவட்ட செயலாளர் ராம்குமார்், செங்கல்பட்டு தொகுதி அமைப்பு செயலாளர் அண்ணாமலை ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர செயலாளர்கள் ராஜி, சரவணன் வரவேற்றனர்.

ஊர்வலம்

செங்கல்பட்டு பழைய பஸ் நிலையத்தில் இருந்து கருப்பு சட்டை அணிந்தபடி டிராக்டரில் அமர்ந்தபடி 1000-க்கும் மேற்பட்டோர் ஊர்வலமாக சென்றனர்.

பின்னர் செங்கல்பட்டு தலைமை தபால் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை செங்கல்பட்டு டவுன் போலீசார் கைது செய்து திருமண மண்டபம் ஒன்றில் தங்க வைத்தனர்.

மதுராந்தகம்

காஞ்சீபுரம் மாவட்டம் மதுராந்தகம், செய்யூர், மேல்மருவத்தூர், சோத்துபாக்கம், சித்தாமூர், கருங்குழி உள்ளிட்ட இடங்களில் முழு அளவில் கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டிருந்தது.

காஞ்சீபுரம் தெற்கு மாவட்ட அமைப்பு செயலாளர் பூக்கடை சரவணன் தலைமையில் முன்னாள் மாவட்ட வன்னியர் சங்கத்தலைவர் சகாதேவன், முன்னாள் மாவட்ட தொண்டர் அணி செயலாளர் சந்தோஷ், முன்னாள் நகர செயலாளர் ராஜா ஆகியோர் முன்னிலையில் 100-க்கும் மேற்பட்ட பா.ம.க.வினர் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி மதுராந்தகம் பஸ் நிலையத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தி தேரடி தெரு ஆஸ்பிட்டல் ரோடு கருங்குழி உள்ளிட்ட முக்கிய வீதிகளில் பேரணி நடத்தினர்.

கும்மிடிப்பூண்டி

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து பா.ம.க. சார்பில் கும்மிடிப்பூண்டி பஜாரில் நேற்று தபால் நிலையம் எதிரே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதற்கு பா.ம.க. மாநில துணை பொதுச்செயலாளர் எம்.செல்வராஜ் தலைமை தாங்கினார். திருவள்ளூர் கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் கி.வேணு, தலைமை செயற்குழு உறுப்பினர் டி.ஜெ.கோவிந்தராசன், காங்கிரஸ் கட்சியின் மாவட்ட பொதுச்செயலாளர் சிவாரெட்டியார், மாவட்ட துணைத்தலைவர் சம்பத், த.மா.கா நிர்வாகிகள் சேகர், டி.கே.மாரிமுத்து உள்பட பலர் முன்னிலை வகித்தனர்.

இதில் 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அவர்கள், உழவன் செய்தான் சாகுபடி. அரசு செய்யுது சாகும்படி. காவிரி தண்ணீர் பிச்சை அல்ல. எங்களது உரிமை என ஆர்ப்பாட்டத்தின்போது கோஷம் போட்டனர். 

Next Story