புதுப்பாதை காட்டிய கவிமேதை


புதுப்பாதை காட்டிய கவிமேதை
x
தினத்தந்தி 12 April 2018 11:21 AM IST (Updated: 12 April 2018 11:21 AM IST)
t-max-icont-min-icon

நாளை (ஏப்ரல் 13-ந்தேதி) பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பிறந்த நாள்.

பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் தேனமுதப் பாடல்களை எழுதி, திரையுலகில் கொடி கட்டிப் பறந்த பாடலாசிரியர்.

இவரது தத்துவம் நிறைந்த பாடல்கள் தமிழர் நெஞ்சங்களில் நீங்கா இடம்பெற்றவை. பத்தாண்டு காலத்தில் 50-க்கும் மேற்பட்ட படங்களுக்குப் பாட்டெழுதிப் படவுலகில் ஒரு வரலாற்றைப் படைத்தவர். சிந்தனைத் தெளிவும், கருத்துச்செறிவும் மிக்க இவரது பாடல்கள் காலத்தை கடந்து நிற்பவை.

மக்கள் கவிஞர் என்று அன்புடன் அழைக்கப்பட்ட பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் 13-4-1930 அன்று தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை வட்டத்தில் செங்கப்படுத்தான் காடு என்ற கிராமத்தில் அருணாசலம்-விசாலாட்சி தம்பதிக்கு நான்காவது குழந்தையாக பிறந்தார்.

உள்ளூர் திண்ணைப்பள்ளிக்கூடத்தில் அரிச்சுவடி படித்ததோடு கல்யாணசுந்தரத்தின் படிப்பு முடிந்தது. நாடகம் பார்ப்பது, சினிமா பார்ப்பது, பார்த்துவிட்டு, அவற்றில் கேட்ட பாடல்களை வரி பிசகாமல் பாடிக்கொண்டு இருப்பது கல்யாண சுந்தரத்தின் விருப்பமான பொழுதுபோக்கு. கம்யூனிஸ்டு கட்சிக் கூட்டங்களிலும், பிற நிகழ்ச்சிகளிலும் பாட்டு பாடுவது இவரது பணியாக இருந்தது.

பிறகு புதுச்சேரிக்கு சென்று தனது குருவான பாவேந்தர் பாரதிதாசனிடம் உதவியாளராக சேர்ந்தார். 1954-ம் ஆண்டு, ‘படித்தப் பெண்’ திரைப்படத்துக்காக முதல் பாடலை எழுதினார். எம்.ஜி.ஆரின் ‘நாடோடி மன்னன்’ படத்துக்கு பாடல்கள் எழுதினார். அப்படத்தில் வரும் ‘தூங்காதே தம்பி தூங்காதே...’ என்ற பாடல் மூலம் புகழின் சிகரத்தை அடைந்தார், கல்யாணசுந்தரம். ஸ்ரீதர் இயக்கத்தில் வெளிவந்த கல்யாணப்பரிசு படத்துக்கு இவர் எழுதிய எல்லாப்பாடல்களும் பிரமாதமாக அமைந்தன. இவரது எளிய பாடல்கள் கூட எழுச்சியூட்டும் பாடல்களாக இருந்தன.

கல்யாணசுந்தரத்தின் பாடல்களெல்லாம் பாட்டாளி மக்களின் வாழ்க்கையை பிரதிபலிப்பவை. தெருக்களில் எழுதி திண்ணைகளில் வாசிக்கப்பட்டவை. எளிய நடை, உணர்ச்சி கொந்தளிப்பு, சிந்தனைச் சிதறல் இவற்றின் இணைப்பே அவரது பாடல்கள்.

“தோனாறு பாயுது செங்கதிர் சாயுது
ஆனாலும் மக்கள் வயிறு காயுது” என அவர் பாடியதை யாரால் மறுக்க முடியும்.

“வளர்ந்து வரும் உலகத்துக்கே நீ வலது கையடா
தனி உடைமைக் கொடுமைகள் தீர தொண்டு செய்யடா
தானாய் எல்லாம் மாறும் என்பது பழைய பொய்யடா”

இது மேடு பள்ளமற்ற சமுதாயத்தை உருவாக்கும் உரிமைக்குரலாய் இன்றும் காடு மேடு நாடு எல்லாம் எதிரொலித்துக்கொண்டு இருக்கும் அற்புத பாடல்.

‘திருடராய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது’ என்று பாடினார் பட்டுக்கோட்டையார். இப்பாடல் வரி இன்றைக்கும் வேதம்போலவே வழிகாட்டி கொண்டிருக்கிறது.

‘பனியை நம்பி வெதை வெதைச்சா பலன் விளையாது...’ என்று பாடிக்கொண்டே வரும் பட்டுக்கோட்டையின் கதாநாயகி அடுத்த வரியில் “அத்தான்... வழியில் பார்த்து சிரிச்சதெல்லாம் மனைவியாகுமா?” என்று கேட்கிறாள்! எவ்வளவு ஆழமான அழகான படப்படிப்பு இது! நாணமிகுந்த நாயகி பாடுகிறாள், “நான் கருங்கல்லு சிலையோ? காதல் எனக்கில்லையோ? வரம்பு மீறுதல் முறையோ?” அடடா எத்தனை நளினமான காதல் உணர்வு இது?

நிலவுக்கும் ஆடை கட்டிபார்த்த அதிசயக் கவிஞர் பட்டுக்கோட்டை! வெட்கத்திற்கு விடுமுறை விட்டுவிட்டுவா என்று அழைக்கிற இக்கால திரை இசைகாதல் பாடல்களின் வக்கிரத்தை வார்த்தைகளில் அடக்கிவிடமுடியாது. ஆனால் பட்டுக்கோட்டையோ, “ஆடை கட்டி வந்த நிலவோ? கண்ணில் மேடை கட்டி ஆடும் எழிலோ? குளிர் ஓடையில் மிதக்கும் மலர் ஜாடையில் சிரிக்கும் இவள் காடுவிட்டு வந்த மயிலோ? நெஞ்சில் கூடுகட்டி வாழும் குயிலோ” என்று இலக்கியத்தேன் சொட்டச் சொட்ட எழிலார் காதல் காட்சியினை கண்முன் கொண்டுவரும் அற்புதப்பாடல் இது!

“குறுக்குவழியில் வாழ்வுதேடிடும்
குருட்டு உலகமடா இது
கொள்ளையடிப்பதில் வல்லமைகாட்டும்
திருட்டு உலகமடா தம்பி
தெரிந்து நடந்து கொள்ளடா-இதயம்
திருந்த மருந்து சொல்லடா” என்று மகாதேவியில் பட்டுக்கோட்டை எழுதிய இந்தப்பாடல் காலம் வென்று நிற்கும் கருத்தாழமிக்கப் பாடல் அல்லவா?

ஒரு படத்தில் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாட்டு எழுதினார். ஆனால் பாட்டு எழுதியதற்கு பட்டுக்கோட்டையாருக்கு பணம் கொடுக்கப்படவில்லை. ஒரு நாள் பணம் வேண்டி கவிஞர் தயாரிப்பாளர் வீட்டுக்கு சென்றார். தயாரிப்பாளர் கவிஞரை பார்த்துவிட்டு வெளியே இரு என்றாராம். சுயமரியாதையும் துணிவும் மிக்க பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் ஒரு காகிதத்தை எடுத்து, அதில்,

“தாயால் பிறந்தேன்
தமிழால் வளர்ந்தேன்
நாயே நேற்றுன்னை
நடு வீதியில் சந்தித்தேன்
நீயார் என்னை
நில்லென்று சொல்வதற்கு” என்று எழுதி தயாரிப்பாளர் வீட்டு வாசலில் போட்டுவிட்டு சென்றுவிட்டார்.

புகழின் உச்சியில் இருந்தபோது, எதிர்பாராத வகையில் 8-10-1959 அன்று தமது 29-வது வயதில் கல்யாணசுந்தரம் காலமானார். சுயமரியாதையுடனும், தன்மான உணர்வுடனும் வாழ்ந்த பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் நினைவை போற்றும் வகையில், பட்டுக்கோட்டையில் தமிழக அரசு சார்பில் அவருக்கு மணிமண்டபம் கட்டப்பட்டது.

தமிழன்னைக்கு மகுடம் சூட்டிய மகத்தான அந்த கவிஞர் புகழ் காலம் கடந்து வாழும்.

- கவிஞர் ச.இலக்குமிபதி, செயலாளர், கம்பன் கழகம், வேலூர்

Next Story