சிதம்பரம் அருகே நடந்த விவசாயிகள் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் மு.க.ஸ்டாலின் பேச்சு


சிதம்பரம் அருகே நடந்த விவசாயிகள் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் மு.க.ஸ்டாலின் பேச்சு
x
தினத்தந்தி 13 April 2018 4:45 AM IST (Updated: 13 April 2018 12:33 AM IST)
t-max-icont-min-icon

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படும் வரை எங்களது போராட்டம் தொடரும் என சிதம்பரம் அருகே நடந்த விவசாயிகள் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் மு.க.ஸ்டாலின் பேசினார்.

கடலூர்,

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தி.மு.க. செயல்தலைவர் மு.க.ஸ்டாலின், காவிரி உரிமை மீட்பு பயணம் மேற்கொண்டு இருந்தார். கடந்த 7-ந்தேதி திருச்சி முக்கொம்பில் இருந்து தனது பயணத்தை தொடங்கிய அவர், நேற்று முன்தினம் நாகை மாவட்டம் வேளாங்கண்ணி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு சென்றுவிட்டு இரவில் வைத்தீஸ்வரன்கோவிலில் தங்கினார்.

நேற்று 6-வது நாளாக நாகை மாவட்டம் வைத்தீஸ்வரன் கோவில், சீர்காழி, கொள்ளிடம் வழியாக கடலூர் மாவட்டத்தின் எல்லையான வல்லம்படுகைக்கு காலை 11.15 மணிக்கு வேனில் வந்தார்.

பிரதமர் நரேந்திரமோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், நேற்று மு.க.ஸ்டாலின் கருப்பு பேண்ட் மற்றும் கருப்பு சட்டை அணிந்து இருந்தார். அவருடன் வந்த தலைவர்களும் கருப்பு சட்டை அணிந்து இருந்தனர்.

வல்லம்படுகைக்கு வந்த மு.க.ஸ்டாலினுக்கு கடலூர் கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ. தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் மு.க.ஸ்டாலின் சிதம்பரம் அருகே உள்ள கடவாச்சேரி கிராமத்தில் நடைபெற்ற விவசாயிகள் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி அனைத்து கட்சி சார்பில் காவிரி உரிமை மீட்பு பயணம் 2 பிரிவுகளாக நடத்த வேண்டும் என முடிவெடுக்கப்பட்டது. அதன்பேரில் கடந்த 7-ந்தேதி திருச்சி முக்கொம்பில் இருந்து ஒரு பயணமும், 9-ந்தேதி அரியலூர் மாவட்டத்தில் இருந்து மற்றொரு பயணமும் தொடங்கியது. இந்த 2 பயணமும் இன்று(அதாவது நேற்று) கடலூரில் சங்கமிக்க உள்ளது. காவிரி உரிமை மீட்பு பயணம் என்பது நமது உரிமையை நிலைநாட்டிக் கொள்வதற்கும், காவிரி பிரச்சினைக்கு முக்கியத்துவம் அளித்திட வேண்டும் என்பதற்காகத்தான்.

சுப்ரீம் கோர்ட்டு அளித்த இறுதி தீர்ப்பை, மத்திய அரசு நிறைவேற்றித்தந்திட வேண்டும். இதற்கு மாநிலத்தில் உள்ள விபரீத ஆட்சி உரிய அழுத்தத்தை தரவேண்டும் என சாலை மறியல், ரெயில் மறியல், உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டம் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களை அனைத்து கட்சி சார்பில் நடத்தி இருக்கிறோம்.

நீண்ட நாட்களாக உள்ள காவிரி பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றும், டெல்டா பகுதி விவசாயிகளுக்கு ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகத்தான் இந்த பயணத்தை மேற்கொண்டோம்.

கடந்த 6 நாட்களாக நடைபெற்ற இந்த பயணத்தில் இளைஞர்கள், மாணவர்கள், பெண்கள் என ஒட்டுமொத்த பொதுமக்களும் தந்த வரவேற்பு, எங்களை ஊக்கப்படுத்தும் வகையிலும், உற்சாகப்படுத்தும் வகையிலும் இருந்ததாக இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் குறிப்பிட்டார். ஆக, நாங்கள் எந்த அளவு விழிப்புணர்வு பெற்றுள்ளோமோ, அதை விட பல மடங்கு விழிப்புணர்வை டெல்டா பகுதி விவசாயிகள் பெற்றுள்ளார்கள் என்பதை அறிந்துள்ளோம்.

மத்திய பா.ஜ.க. அரசு மீது ஒட்டு மொத்த தமிழக மக்களும் கடும் கோபத்தில் இருக்கிறார்கள். பிரதமர் மோடி தமிழகத்தில் சென்னை புறநகர் பகுதியில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வரஇருப்பதை அறிந்து அனைத்து கட்சி கூட்டத்தில் கண்டனம் தெரிவிக்கும் வகையில் கருப்பு கொடி காட்ட வேண்டும் என முடிவெடுத்தோம்.

சென்னை மட்டுமின்றி தமிழகம் முழுவதும் கருப்பு கொடி பறக்க வேண்டும், கருப்பு சட்டை அல்லது கருப்பு சின்னம் அணிந்து, பிரதமர் மோடி வரும் நாளை கருப்பு நாளாகவோ அல்லது துக்க நாளாகவோ வெளிப்படுத்த வேண்டும் என்ற வேண்டுகோளை தமிழக மக்கள் நிறைவேற்றி தந்துள்ளார்கள். அதற்காக நான் மிக மகிழ்ச்சியடைகிறேன்.

தமிழ்நாட்டை இருளாக்கவும், பாலைவனமாக்கவும் மத்திய ஆட்சி இருந்து கொண்டு இருக்கிறது. இதற்கு மாநில அரசு துணை நிற்கிறது.

கருப்பு கொடி காண்பித்தால், அதை எதிர்கொள்ளும் திறமை பிரதமருக்கு இருக்க வேண்டும். இதற்கு முன்பு பிரதமராக இருந்த நேரு, இந்திரா காந்தி ஆகியோர் சென்னை விமான நிலையத்திற்கு வந்த போது அவர்களுக்கு கருப்பு கொடி காண்பித்தோம். அதை அவர்கள் ஏற்றுக்கொண்டார்கள். ஆனால் பிரதமர் மோடி விமானத்தில் இருந்து இறங்கி, சாலை வழியாக காரில் சென்று கருப்பு கொடி காட்டுவதை எதிர்கொண்டிருக்க வேண்டும். சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இருந்து கிண்டிக்கு வர 5 அல்லது 10 நிமிடங்கள் ஆகும். அந்த நிகழ்ச்சிக்கு பிரதமர் ஹெலிகாப்டரில் தான் வந்து சென்றிருக்கிறார்.

ஆகாயத்தில் பறக்கும் பறவை இரைதேடி கீழே தான் இறங்கி வரவேண்டும். அதே போல் பிரதமர் நரேந்திரமோடியும் ஆகாயத்தில் பறந்தாலும், தேர்தல் வரும் போது கீழே இறங்கி தான் வரவேண்டும். எங்களுடைய காவிரி உரிமை மீட்பு பயணம் நிறைவடைந்தாலும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படும் வரை எங்கள் போராட்டம் ஓயாது. இவ்வாறு அவர் பேசினார்.

முன்னதாக காவிரி உரிமை மீட்பு பயணத்தின் 2-ம் குழு பயணம் அரியலூரில் இருந்து புறப்பட்டு நேற்று முன்தினம் காட்டுமன்னார்கோவிலை வந்தடைந்தது. தொடர்ந்து அந்த குழுவினர் தி.மு.க. துணை பொதுச்செயலாளர் ஐ.பெரியசாமி தலைமையில் குமராட்சி வழியாக சென்று கடவாச்சேரி கிராமத்தில் நடைபெற்ற விவசாயிகள் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் இணைந்தனர். இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநில பொதுச்செயலாளர் பாலகிருஷ்ணன், தி.மு.க. முன்னாள் எம்.பி. ராசா, முன்னாள் துணை சபாநாயகர் துரைசாமி, மனிதநேய மக்கள் கட்சி பொதுச்செயலாளர் அப்துல்சமது, இந்திய கம்யூனிஸ்டு கட்சி தேசியக்குழு உறுப்பினர் வீரபாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன், தமிழ்நாடு விவசாய கட்சி தலைவர் பொன்குமார் ஆகியோர் பேசினார்.

மேலும் இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் திருநாவுக்கரசர், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் துரை.ரவிக்குமார், கடலூர் கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ., ஒன்றிய செயலாளர்கள் மாமல்லன், டாக்டர் மனோகர் மற்றும் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள், விவசாயிகள் கலந்து கொண்டனர்.

Next Story