மாங்காட்டில் ஏலச்சீட்டு நடத்தி மோசடியில் ஈடுபட்டவர் போலீசில் சரண்


மாங்காட்டில் ஏலச்சீட்டு நடத்தி மோசடியில் ஈடுபட்டவர் போலீசில் சரண்
x
தினத்தந்தி 13 April 2018 4:00 AM IST (Updated: 13 April 2018 12:49 AM IST)
t-max-icont-min-icon

மாங்காட்டில் ஏலச்சீட்டு நடத்தி மோசடியில் ஈடுபட்டவர் போலீசில் சரண் அடைந்தார். அப்போது பாதிக்கப்பட்டவர்கள் போலீஸ் நிலையம் முன்பு திரண்டனர்.

பூந்தமல்லி,

மாங்காட்டை சேர்ந்தவர் பழனி (வயது 70). ரூ.1 லட்சம் முதல் ரூ.20 லட்சம் வரையிலான மாதாந்திர ஏலச்சீட்டு நடத்தி வந்தார். மாங்காடு மற்றும் அதனை சுற்றி உள்ள பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் இவரிடம் சீட்டு கட்டி வந்தனர். பல ஆண்டுகளாக ஏலச்சீட்டு நடத்தி வந்த இவர் கடந்த சில மாதங்களாக ஏலச்சீட்டு முடிந்தவர்களுக்கு உரிய பணத்தை கொடுக்காமல் இருந்து வந்தார். இந்த நிலையில் சீட்டு போட்டவர்கள் பழனி வீட்டுக்கு சென்று பணம் கேட்டுள்ளனர். பணத்தை தருவதாக கூறியவர் திடீரென வீட்டை பூட்டி விட்டு செல்போனை சுவிட்ச் ஆப் செய்து விட்டு எங்கேயோ சென்று விட்டார். 

இதனால் பணம் கட்டியவர்கள் செய்வதறியாமல் இருந்தனர். 

நேற்று மாலை பழனி, தான் ஏலச்சீட்டு நடத்தி திவாலாகி விட்டதாக கூறி மாங்காடு போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தார்.

 போலீஸ் நிலையம் முன்பு திரண்டனர்

 இந்த தகவல் அறிந்ததும் ஏலச்சீட்டு கட்டியவர்கள் 200–க்கும் மேற்பட்டோர் மாங்காடு போலீஸ் நிலையம் முன்பு திரண்டனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு வந்த குன்றத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சார்லஸ் சீட்டு கட்டியவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். இதில் ஒரு குறிப்பிட்ட தொகை மட்டுமே ஏமாற்றி இருந்தால் உள்ளூர் போலீஸ் நிலையத்தில் புகார் ஏற்றுக்கொள்ளப்பட்டு விசாரணை நடத்தப்படும். ஆனால் தற்போது இங்கு ஏலச்சீட்டு கட்டியவர்கள், வட்டிக்கு பணம் கொடுத்தவர்கள் என ஏராளமானோர் வந்திருப்பதாலும், மோசடி செய்யப்பட்ட தொகை பல கோடி ரூபாய் இருக்கும் என்பதால் சென்னையில் உள்ள பொருளாதார குற்றவியல் பிரிவு போலீசில் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளிக்குமாறு தெரிவித்தார். இதையடுத்து பாதிக்கப்பட்டவர்கள் அங்கிருந்து சென்றனர். சரண் அடைந்த பழனி பொருளாதார குற்றவியல் போலீசில் ஒப்படைப்பதற்காக அழைத்து செல்லப்பட்டார்.

Next Story