ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி புதுக்கோட்டையில் கடைகள் அடைப்பு கன்டெய்னர் லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தம்


ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி புதுக்கோட்டையில் கடைகள் அடைப்பு கன்டெய்னர் லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தம்
x
தினத்தந்தி 13 April 2018 2:30 AM IST (Updated: 13 April 2018 1:18 AM IST)
t-max-icont-min-icon

ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி புதுக்கோட்டையில் கடையடைப்பு போராட்டம் நடந்தது. கன்டெய்னர் லாரி உரிமையாளர்களும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

தூத்துக்குடி, 

ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி புதுக்கோட்டையில் கடையடைப்பு போராட்டம் நடந்தது. கன்டெய்னர் லாரி உரிமையாளர்களும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

கடையடைப்பு 

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி ஆலையை சுற்றி உள்ள கிராம மக்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களுக்கு ஆதரவாக வியாபாரிகள் சங்கத்தினர், மாணவர்களும் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி தூத்துக்குடி அருகே உள்ள புதுக்கோட்டையில் அனைத்து வியாபாரிகள் சங்கம் சார்பில் நேற்று கடையடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது. இதனால் புதுக்கோட்டை பகுதியில் உள்ள 320 கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன.

அதேபோன்று புதுக்கோட்டையில் ஆட்டோ ஓட்டுனர்கள் சங்கத்தினரும் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஒருநாள் வேலைநிறுத்த போராட்டம் நடத்தினர். இதனால் புதுக்கோட்டையில் உள்ள சுமார் 50 ஆட்டோக்களும் நேற்று இயக்கப்படவில்லை.

இதைத்தொடர்ந்து புதுக்கோட்டை பஸ் நிறுத்தம் அருகே வியாபாரிகள் சங்கம் மற்றும் ஆட்டோ ஓட்டுனர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்று வலியுறுத்தி கோ‌ஷங்கள் எழுப்பினர். இதில் திரளானவர்கள் கலந்து கொண்டனர்.

கன்டெய்னர் லாரிகள் 

தூத்துக்குடி மாவட்ட கன்டெய்னர் லாரி உரிமையாளர்கள் சங்கம் சார்பில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஒருநாள் வேலைநிறுத்த போராட்டம் அறிவிக்கப்பட்டது. அதன்படி நேற்று காலை 6 மணி முதல் கன்டெய்னர் லாரிகள் இயக்கப்படவில்லை. இதனால் சுமார் 800 லாரிகள் இயக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன. லாரி உரிமையாளர்கள் போராட்டம் தொடர்ந்து இன்று(வெள்ளிக்கிழமை) காலை 6 மணி வரை நடக்கிறது. இதனால் நேற்று கன்டெய்னர்கள் ஏற்றுமதி பாதிக்கப்பட்டது.

மேலும் தூத்துக்குடியில் பல்வேறு இடங்களில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்பு கொடிகள் கட்டப்பட்டு இருந்தன. இதனை போலீசார் அப்புறப்படுத்தினர். கோர்ட்டு முன்பு கட்டப்பட்டு இருந்த கொடிகளை அப்புறப்படுத்திய போது, சில வக்கீல்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் சிறிது பரபரப்பு ஏற்பட்டது.

Next Story