திருவொற்றியூரில் குட்டையில் செத்து மிதக்கும் மீன்களை அகற்றும் பணி தீவிரம்
திருவொற்றியூரில் குட்டையில் செத்து மிதந்த மீன்கள் அகற்றப்பட்டது.
திருவொற்றியூர்,
திருவொற்றியூர் அம்பேத்கர் நகரில் ரெயில்வேக்கு சொந்தமான இடத்தில் சுமார் 8 ஏக்கர் பரப்பளவில் குட்டை உள்ளது. இந்த குட்டையில் ஏராளமான மீன்கள் உள்ளன. கோடைகாலத்தில் குட்டையில் நீர்வற்றிய பின்பு அந்த பகுதி மக்கள், குட்டையில் இறங்கி மீன்களை பிடித்து சாப்பிட்டு வந்தனர்.
இந்த நிலையில் திடீரென்று குட்டையில் உள்ள ஏராளமான மீன்கள் செத்து மிதந்தன. இதனால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுவதாக அப்பகுதி மக்கள், மாநகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர்.
இதையடுத்து நேற்று முன்தினம் திருவொற்றியூர் மண்டல நல அலுவலர் இளஞ்செழியன், சுகாதார அலுவலர் ஷேக்மீரான், உதவி செயற்பொறியாளர் ஜெயராமன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று ஜே.சி.பி. எந்திரம் மூலம் குட்டையில் உள்ள ஆகாயத்தாமரை செடிகளை அகற்றி, அங்கு செத்து மிதக்கும் மீன்களை அப்புறப்படுத்திவிட்டு தொற்று நோய் பரவாமல் இருக்க தீவிர சுகாதார பணிகள் மேற்கொண்டனர். 2–வது நாளாக நேற்றும் இந்த பணிகள் நடைபெற்றது.
கடும் வெயில் காரணமாக மீன்கள் செத்தனவா?, அல்லது யாராவது குட்டை நீரில் விஷத்தை கலந்துவிட்டார்களா? என்பதை அறிவதற்காக குட்டை நீரை சேகரித்து ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டு உள்ளதாக மண்டல அதிகாரிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story