ராமேசுவரத்தில் டாஸ்மாக் கடைகளே இல்லாததால் மதுபானம் வீடுதேடி வருவதால் குடிமகன்கள் குஷி


ராமேசுவரத்தில் டாஸ்மாக் கடைகளே இல்லாததால் மதுபானம் வீடுதேடி வருவதால் குடிமகன்கள் குஷி
x
தினத்தந்தி 13 April 2018 4:00 AM IST (Updated: 13 April 2018 1:51 AM IST)
t-max-icont-min-icon

டாஸ்மாக் கடைகளே இல்லாத ராமேசுவரத்தில் மதுபானம் அமோகமாக விற்பனையாகி வருகிறது. வீடுதேடி வருவதால் குடிமகன்கள் குஷி அடைந்து உள்ளனர்.

ராமேசுவரம்,

தமிழகம் முழுவதும் நெடுஞ்சாலை பகுதி, கோவில் மற்றும் பள்ளி, கல்லூரிகளின் அருகே உள்ள அனைத்து மதுகடைகளையும் அகற்ற வேண்டும் என ஐகோர்ட்டு கடந்த சில மாதங்களுக்கு முன்பு உத்தரவிட்டது. ஐகோர்ட்டு உத்தரவின்படி ராமேசுவரம், தங்கச்சிமடம் பகுதிகளில் செயல்பட்டு வந்த 10-க்கும் மேற்பட்ட மதுக்கடைகள் மூடப்பட்டன. பாம்பன் ரெயில் நிலையம் அருகே உள்ள பகுதியில் மட்டும் 2 டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகின்றன.

ராமேசுவரம் பகுதியில் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்ட பிறகு அக்னி தீர்த்த கடற்கரை, துறைமுக பகுதி, ரெயில்வே நிலைய பகுதி, வேர்க்கோடு, பேருந்து நிலையம், மின் வாரிய அலுவலகத்தின் பின்பகுதி, மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளி அருகில் உள்ளிட்ட பல இடங்களில் மது விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது. இதுதவிர திருமண மண்டபங்கள் மற்றும் விழாக்கள் நடைபெறும் இடங்கள் முன்பு சிலர் மதுபான பாட்டில்களை பைகளில் வைத்து விற்றுவருகின்றனர்.

மேலும் ராமேசுவரம் கோவில் அருகே ரத வீதி, துறைமுக பகுதி, வேர்க்கோடு பகுதி உள்ளிட்ட இடங்களில் ஒரு சில கடைகளிலும் மதுபான பாட்டில்கள் கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுவதாகவும், சிலர் வீடுதேடி வந்து மதுபான பாட்டில்கள் டோர் டெலிவாரியாக விற்பனை செய்து வருவதாக பொதுமக்கள் புகார் கூறுகின்றனர். வீடுதேடி வந்து மதுவிற்பனை செய்யப்படுவதால் குடிமகன்கள் குஷி அடைந்து உள்ளனர். ஆனால் ராமேசுவரம் வரும் சுற்றுலா பயணிகளும், பொதுமக்களும் அவதிஅடைந்து வருகின்றனர். எனவே ராமேசுவரத்தில் மதுவிற்பனையை தடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஓம்பிரகாஷ்மீனா உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story