மருத்துவர்கள் சமூக சேவையில் ஈடுபட வேண்டும் பட்டமளிப்பு விழாவில் வெங்கையா நாயுடு பேச்சு


மருத்துவர்கள் சமூக சேவையில் ஈடுபட வேண்டும் பட்டமளிப்பு விழாவில் வெங்கையா நாயுடு பேச்சு
x
தினத்தந்தி 13 April 2018 4:00 AM IST (Updated: 13 April 2018 2:38 AM IST)
t-max-icont-min-icon

மருத்துவர்கள் சமூக சேவையில் ஈடுபட வேண்டும் என்று பெங்களூருவில் நடந்த பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு பேசினார்.

பெங்களூரு, 

மருத்துவர்கள் சமூக சேவையில் ஈடுபட வேண்டும் என்று பெங்களூருவில் நடந்த பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு பேசினார்.

பட்டமளிப்பு விழா

கர்நாடக அரசின் ராஜீவ் காந்தி சுகாதார அறிவியல் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா பெங்களூரு-ஓசூர் ரோட்டில் உள்ள நிமான்ஸ் மருத்துவமனை மாநாட்டு அரங்கத்தில் நேற்று நடைபெற்றது. இதில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு கலந்து கொண்டு மாணவ-மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

பட்டங்களை பெற்று மருத்துவ தொழிலில் காலடி எடுத்து வைக்கப்போகும் நீங்கள், சுகாதாரத்துறையில் எழும் சவால்களை தங்கள் வாழ்க்கையில் ஒரு பாகமாக ஏற்க தயாராக வேண்டும். பல்வேறு சவால்களுக்கு மத்தியில் தான் வாய்ப்புகள் வருகின்றன. ஒரு கையில் சவாலும், இன்னொரு கையில் வாய்ப்பும் கிடைக்கிறது.

மிக சிறந்த எதிர்காலம்

2030-ம் ஆண்டில் இந்தியா உலகின் இளைஞர்கள் அதிகம் உள்ள நாடாக உருவெடுக்கும். நமது நாட்டில் உயர்கல்வித்துறையை இன்னும் பலப்படுத்த வேண்டும். அதற்கு சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும். அறிவுத்திறன் அடிப்படையில், பொருளாதார மாற்றத்தால் ஏற்படும் சவால்களை எதிர்கொள்ள நாம் தயாராக வேண்டும். நமது நாட்டுக்கு மிக சிறந்த எதிர்காலம் உள்ளது.

உலக வங்கி, புள்ளிகளை வழங்கும் ‘மூடி‘ உள்ளிட்ட அமைப்புகள் இதை உறுதிபடுத்தி உள்ளன. 21-வது நூற்றாண்டு இந்தியாவின் நூற்றாண்டாக இருக்கும். நாம் அனைவரும் ஒன்றாக உழைத்து நாட்டை உயர்ந்த பாதைக்கு அழைத்து செல்ல வேண்டும். சேவை மனப்பான்மை மற்றும் அன்பு இவை இரண்டும் மிக முக்கியமானது. இந்திய பரம்பரையில் இது கலந்துள்ளது. மருத்துவ துறை மிக உயர்ந்த துறை ஆகும். இது ‘மிஷன்‘ மட்டும், ‘கமிஷன்‘ கிடையாது என்பதை நீங்கள் புரிந்துக்கொண்டு, மருத்துவர்கள் சமூக சேவையில் ஈடுபட வேண்டும்.

மக்களிடையே விழிப்புணர்வு

ராஜீவ்காந்தி சுகாதார பல்கலைக்கழகம் நல்ல தரமான மருத்துவ கல்வியை வழங்கி வருகிறது. இந்த பல்கலைக்கழகம் பல்வேறு சாதனைகள் மூலம் இந்த சமூகத்திற்கு பல சேவைகளை ஆற்றி வருகின்றது. ஆயினும் இன்னும் செய்ய வேண்டிய சாதனைகள் ஏராளமாக இருக்கின்றன. உலக அளவில் இந்தியாவும் வேகமாக முன்னேறி வருகிறது. ஆனாலும் நாட்டில் 25 சதவீத மக்கள் வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளனர். தொற்று நோய்கள் மற்றும் தொற்று அல்லாத நோய்கள் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டியது அவசியம்.

இவ்வாறு வெங்கையா நாயுடு பேசினார்.

இந்த விழாவில் இந்த ஆண்டு மொத்தம் மருத்துவ படிப்பை முடித்துள்ள 26 ஆயிரத்து 469 பேரில் 84 மாணவ-மாணவிகளுக்கு தங்க பதக்கம் வழங்கப்பட்டன. இந்த விழாவில் கர்நாடக கவர்னர் வஜூபாய் வாலா, ராஜீவ்காந்தி சுகாதார பல்கலைக்கழக துணை வேந்தர் ரமேஷ், ஆராய்ச்சி பிரிவு இயக்குனர் வெங்கடேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story