ரூ.1 கோடி கேட்டு கடத்தப்பட்ட தனியார் நிறுவன ஊழியர் மீட்பு கடன் கொடுக்காததால் கடத்திய நண்பர் உள்பட 6 பேர் கைது


ரூ.1 கோடி கேட்டு கடத்தப்பட்ட தனியார் நிறுவன ஊழியர் மீட்பு கடன் கொடுக்காததால் கடத்திய நண்பர் உள்பட 6 பேர் கைது
x
தினத்தந்தி 13 April 2018 3:00 AM IST (Updated: 13 April 2018 2:56 AM IST)
t-max-icont-min-icon

பெங்களூருவில் ரூ.1 கோடி கேட்டு கடத்தப்பட்ட தனியார் நிறுவன ஊழியர் மீட்கப்பட்டார். கடன் கொடுக் காததால் அவரை கடத்திய நண்பர் உள்பட 6 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெங்களூரு, 

பெங்களூருவில் ரூ.1 கோடி கேட்டு கடத்தப்பட்ட தனியார் நிறுவன ஊழியர் மீட்கப்பட்டார். கடன் கொடுக் காததால் அவரை கடத்திய நண்பர் உள்பட 6 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ரூ.1 கோடி கேட்டு மிரட்டல்

பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா அருகே வசித்து வருபவர் சிவக்குமார். இவரது மனைவி சுதா. தனியார் நிறுவனம் ஒன்றில் உள் அலங்கார வடிவமைப்பு ஊழியராக சிவக்குமார் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில், கடந்த 8-ந் தேதி காலையில் நண்பர் அழைப்பதாக மனைவி சுதாவிடம் கூறிவிட்டு சிவக்குமார் வெளியே சென்றார். அன்றைய தினம் இரவு வரை அவர் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. சிவக்குமாரின் செல்போனும் ‘சுவிட்ச்-ஆப்‘ செய்யப்பட்டு இருந்தது. இதனால் தனது கணவர் குறித்து உறவினர்கள், நண்பர்களிடம் சுதா விசாரித்து பார்த்தார்.

ஆனால் சிவக்குமாரை பற்றிய எந்த தகவலும் அவருக்கு கிடைக்கவில்லை. இந்த நிலையில், மறுநாள்(9-ந் தேதி) காலையில் சுதாவின் செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்தது. அப்போது எதிர் முனையில் பேசிய மர்மநபர், சிவக்குமாரை கடத்தி வைத்திருப்பதாகவும் ரூ.1 கோடி கொடுத்தால் விடுவிப்போம் என்றும், இதுபற்றி போலீசில் புகார் கொடுத்தால் சிவக்குமாரை கொலை செய்து விடுவோம் என்றும் சுதாவை மிரட்டினார். இதை கேட்டு அவர் அதிர்ச்சி அடைந்தார்.

3 தனிப்படைகள் அமைப்பு

பின்னர் தனது கணவர் கடத்தப்பட்டு இருப்பது குறித்தும், கடத்தல்காரர்கள் ரூ.1 கோடி கேட்டு மிரட்டுவதாகவும் கூறி பரப்பனஅக்ரஹாரா போலீஸ் நிலையத்தில் சுதா புகார் கொடுத்தார். அதன் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து கடத்தல்காரர்களிடம் இருந்து சிவக்குமாரை மீட்க நடவடிக்கை எடுத்தார்கள். மேலும் துணை போலீஸ் கமிஷனர் போரலிங்கய்யா தலைமையில் 3 தனிப்படைகளும் அமைக்கப்பட்டன.

இந்த நிலையில், தனிப்படை போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில் கோலாரில் பதுங்கி இருந்த கடத்தல்காரர்கள் 6 பேரை கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து சிவக்குமாரையும் மீட்டனர். இதுகுறித்து பெங்களூருவில் நேற்று சட்டம்-ஒழுங்கு கூடுதல் போலீஸ் கமிஷனர் சீமந்த்குமார் சிங் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

6 பேர் கைது

தனியார் நிறுவன ஊழியரான சிவக்குமார் கடத்தப்பட்டது குறித்து பரப்பனஅக்ரஹாரா போலீசில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருந்தது. கடத்தல்காரர்களை கைது செய்யவும், சிவக்குமாரை மீட்கவும் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. கடத்தல்காரர்கள் சுதாவின் செல்போனுக்கு தொடர்பு கொண்டு ரூ.1 கோடி கேட்டு மிரட்டல் விடுத்திருந்தனர். அதன் அடிப்படையில் செல்போன் சிக்னல் மூலம் கடத்தல்காரர்கள் இருக்கும் இடத்தை கண்டறிய முதலில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. அப்போது கடத்தல்காரர்கள் கோலாரில் இருப்பதை அறிந்ததும், தனிப்படை போலீசார் அங்கு விரைந்து சென்றனர்.

அங்கு வைத்து சிவக் குமாரை மீட்டதுடன், அவரை கடத்தியதாக பன்னரகட்டா ரோடு, அரிக்கெரேயை சேர்ந்த சத்யா என்ற சத்யவேளாச்சேரி(வயது 24), கோலார் மாவட்டத்தை சேர்ந்த யஷ்வந்த யாதவ்(24), வினோத் குமார்(21), சஞ்சய்ரெட்டி(20), சேகர்(21), ஜெகன்நாத்(23) ஆகிய 6 பேரும் கைது செய்யப்பட்டு உள்ளனர். கைதானவர்களில் சத்யாவும், கடத்தப்பட்ட சிவக்குமாரும் நண்பர்கள் ஆவர். சத்யா கட்டிட காண்டிராக்டராக இருந்து வருகிறார். சத்யாவுக்கு பல லட்சம் ரூபாய் பணம் தேவைப்பட்டு உள்ளது. அதே நேரத்தில் சிவக்குமார் தனக்கு சொந்தமான வீட்டை விற்று கிடைத்த பணத்தை வங்கியில் போட்டு வைத்திருந்தார்.

கடன் கொடுக்காததால்...

இதுபற்றி அறிந்த சத்யா, தனக்கு பணம் கடனாக கொடுக்கும்படி நண்பர் சிவக்குமாரிடம் கேட்டுள்ளார். ஆனால் அவருக்கு கடன் கொடுக்க சிவக்குமார் மறுத்துவிட்டார். இதனால் ஆத்திரமடைந்த சத்யா தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து கடந்த 8-ந் தேதி சிவக்குமாரை கடத்தி சென்றுள்ளார். அவரது மனைவி சுதாவிடம் ரூ.1 கோடி கேட்டு மிரட்டினால், வங்கியில் உள்ள பணத்தை எடுத்து தருவார் என்று சத்யா நினைத்துள்ளார்.

இந்த கடத்தல் பற்றி போலீசில் சுதா புகார் அளித்ததால், தனிப்படை போலீசார் திறமையாக செயல்பட்டு சத்யா உள்பட 6 பேரை கைது செய்திருப்பதுடன், சிவக்குமாரையும் மீட்டுள்ளனர். கைதானவர்களிடம் இருந்து ஒரு கார் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அவர்கள் மீது பரப்பனஅக்ரஹாரா போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இவ்வாறு சீமந்த்குமார் சிங் கூறினார்.

பேட்டியின் போது துணை போலீஸ் கமிஷனர் போரலிங்கய்யா உடன் இருந்தார்.

Next Story