நூதன திருட்டில் ஈடுபட்டு வந்த ‘டக், டக்’ கும்பல் தலைவன் உள்பட 4 பேர் கைது திடுக்கிடும் தகவல்
நூதன திருட்டில் ஈடுபட்டு வந்த ‘டக், டக்’ கும்பல் தலைவன் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
மும்பை,
நூதன திருட்டில் ஈடுபட்டு வந்த ‘டக், டக்’ கும்பல் தலைவன் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர். விசாரணையில் இந்த கும்பல் பற்றி திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்துள்ளன.
‘டக், டக்’ திருட்டு கும்பல்
மும்பையில் காரில் செல்லும் செல்வந்தர்களை குறி வைத்து ஒரு கும்பல் நூதன திருட்டில் ஈடுபட்டு வந்தது. கார் கதவுகளை ‘டக், டக்’ என தட்டி திறக்க வைத்து, காரில் இருப்பவர்களின் கவனத்தை திசை திருப்பி விட்டு பணம், நகை, உடைமைகளை திருடி செல்வதை வாடிக்கையாக கொண்டிருந்தனர்.
மும்பை போலீசுக்கு சவாலாக இருந்த இவர்கள் ‘டக், டக்’ கும்பல் என அழைக்கப்பட்டு வந்தனர்.
இந்தநிலையில் மும்பை, பைதோனி பகுதியில் கடந்த மாதம் பெண் நகை வடிவமைப்பாளர் ஒருவா் காரில் சென்று கொண்டு இருந்தார். அப்போது, ஒருவர் காரின் கண்ணாடியை தட்டி ஆயில் கொட்டுவதாக கூறினார். இதையடுத்து நகை வடிவமைப்பாளர் காரை நிறுத்தி கீழே இறங்கி பார்த்தார். அப்போது, மற்றொருவர் காரில் இருந்த ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் மதிப்புள்ள தங்க நகைகளை திருடிச்சென்றார்.
வலைவீச்சு
இதுகுறித்து நகை வடிவமைப்பாளர் அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நூதன முறையில் நகைகளை திருடி சென்ற ‘டக், டக்' கும்பலை தேடிவந்தனர்.
இந்த கும்பல் பல்வேறு யுக்திகளை கையாண்டு வாகன ஓட்டிகளிடம் கைவரிசை காட்டி வந்த திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்தன. இதில் ஒன்று, அந்த கும்பலை சேர்ந்த ஒருவர் மோட்டார் சைக்கிளில் சென்று சிக்னலில் நிற்கும் கார் மீது வேண்டும் என்றே மோதுவார். பின்னர் அவர் கார் டிரைவரிடம் சண்டை போடுவார்.
இந்த சமயத்தில் கும்பலை சேர்ந்த மற்றொருவர் காரில் உள்ள பணம், பொருட்களை திருடிச்செல்வார்.
தமிழ் மட்டும் தெரியும்
இந்தநிலையில் போலீசார் ‘டக், டக்' கும்பலை சேர்ந்த 4 பேரை கைது செய்தனர். இவர்களில், கூட்டத்திற்கு தலைவனாக செயல்பட்டு வருபவர் என கூறப்படும் தமிழகத்தை சேர்ந்த ரவிசந்திரனும் போலீசாாிடம் சிக்கி இருந்தார். போலீசார் திருட்டு சம்பவங்கள் குறித்து அவரிடம் விசாரணை நடத்தினர். அப்போது ரவிசந்திரன் தனக்கு தமிழை தவிர வேறு மொழி எதுவும் தெரியாது என கூறிவிட்டார்.
போலீசாரின் கேள்விக்கு அவர் தமிழிலேயே பதில் அளித்தார். இதனால் போலீசார் செய்வது அறியாமல் குழம்பி போய்இருந்தனர்.
டாக்டர், என்ஜினீயர் மகன்
இந்தநிலையில் போலீசார் ரவிசந்திரனின் செல்போன் அழைப்பு விவரங்களை வைத்து, அவர் குடும்பத்தை பிரிந்து கோவண்டி பகுதியில் வசித்து வந்ததையும், அவரது குடும்பத்தினர் நவிமும்பையில் வசிப்பதையும் தெரிந்துகொண்டனர். மேலும் ரவிசந்திரனின் முதல் மகன் டாக்டராகவும், 2-வது மகன் மரைன் என்ஜினீயராகவும், 3-வது மகன் ஓட்டல் மேலாண்மை படித்து வருவதும் அறிந்து போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.
இதையடுத்து போலீசார் அவரிடம் இருந்து தகவல்களை கறக்க புதிய திட்டம் போட்டனர். இதன்படி போலீசார் ரவிசந்திரனிடம், விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லையென்றால் உயர்ந்த நிலையில் உள்ள மகன்களை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரிப்போம் என்ற குண்டை தூக்கிப்போட்டனர்.
இதை சற்றும் எதிர்பார்க்காத ரவிசந்திரன் அதிர்ச்சி அடைந்தார். அவர் போலீசாரின் மிரட்டலுக்கு பயந்து அவர்கள் கேட்ட அனைத்து தகவல்களையும் சரளமாக இந்தியில் கூறினார்.
தாராவி கொள்ளையில் தொடர்பு
இதையடுத்து போலீசார் அவர் மறைத்து வைத்து இருந்த ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் மதிப்புள்ள நகைகளை பறிமுதல் செய்தனர்.
இது குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘கைது செய்யப்பட்ட ரவிசந்திரன் பல்வேறு இடங்களில் நூதன முறையில் கார் டிரைவர்களிடம் கைவரிசை காட்டி வந்துள்ளார். மேலும் தாராவியில் 2017-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஏ.டி.எம். மைய வேனில் இருந்து ரூ.1 கோடியே 60 லட்சம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கிலும் அவரை போலீசார் தேடிவருவது விசாரணையில் தெரியவந்துள்ளது’’ என்றார்.
Related Tags :
Next Story