ரோட்டில் காய்கறிகளை கொட்டி வியாபாரிகள் போராட்டம்


ரோட்டில் காய்கறிகளை கொட்டி வியாபாரிகள் போராட்டம்
x
தினத்தந்தி 13 April 2018 5:00 AM IST (Updated: 13 April 2018 5:00 AM IST)
t-max-icont-min-icon

புதுவையில் நடுரோட்டில் காய்கறிகளை கொட்டி பெரிய மார்க்கெட் வியாபாரிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டது.

புதுச்சேரி,

புதுவை நேருவீதியில் பெரியமார்க்கெட் உள்ளது. இங்கு 1000-க்கும் மேற்பட்ட காய்கறி வியாபாரிகள் மொத்தம் மற்றும் சில்லரை வியாபாரம் செய்து வருகின்றனர். கிராம பகுதிகளில் இருந்து காய்கறிகள், பழங்கள், கீரைகளை கொண்டு வந்து பெரியமார்க்கெட்டை சுற்றி சாலை ஓரங்களில் சிறு வியாபாரிகளும் வியாபாரம் செய்து வருகின்றனர்.

இதனால் தங்களுக்கு பாதிப்பு ஏற்படுவதாக கூறி பெரிய மார்க்கெட் வியாபாரிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து கடந்த சில நாட்களுக்கு முன்பு சாலை மறியல் நடத்தினர். அதையொட்டி அங்கு வியாபாரம் செய்ய சாலையோர வியாபாரிகளுக்கு தடை விதிக்கப்பட்டது.

இதை கண்டித்து நகராட்சி ஆணையர் அலுவலகத்தை முற்றுகையிட்டு சாலையோர வியாபாரிகள் போராட்டம் நடத்தினர். இதனால் மறைமலை அடிகள் சாலையில் சாலையோர வியாபாரிகளுக்கு இடம் ஒதுக்கி கொடுக்கப்பட்டது. இதை அந்த பகுதி மக்கள் எதிர்த்தனர்
காய்கறிகளை கொட்டி போராட்டம்

இந்தநிலையில் கடந்த சில நாட்களாக மீண்டும் பெரியமார்க்கெட்டை சுற்றியுள்ள தெருக்களில் சாலையோர வியாபாரிகள் வியாபாரம் செய்ய தொடங்கினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று காலை நேரு வீதியில் பெரிய மார்க்கெட் வியாபாரிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் காய்கறிகளையும், பழங்களையும் சாலையில் கொட்டி போராட்டம் நடத்தினர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டது. இது பற்றிய தகவல் அறிந்து பெரியகடை போலீசார் அங்கு சென்று சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் இதில் உடன்பாடு ஏற்படாததால் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் போலீசார் எச்சரித்ததை தொடர்ந்து அவர்கள் போராட்டத்தினை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Next Story