திருக்கோவிலூரில் ஓய்வுபெற்ற சப்-இன்ஸ்பெக்டர், மனைவியின் வங்கி கணக்கில் இருந்து பணம் அபேஸ், மர்மநபருக்கு வலைவீச்சு


திருக்கோவிலூரில் ஓய்வுபெற்ற சப்-இன்ஸ்பெக்டர், மனைவியின் வங்கி கணக்கில் இருந்து பணம் அபேஸ், மர்மநபருக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 14 April 2018 3:15 AM IST (Updated: 14 April 2018 12:14 AM IST)
t-max-icont-min-icon

திருக்கோவிலூரில் வங்கி அதிகாரி போல் செல்போனில் பேசி ஓய்வுபெற்ற சப்-இன்ஸ்பெக்டர், மனைவியின் வங்கி கணக்கில் இருந்து பணம் அபேஸ் செய்த மர்மநபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

திருக்கோவிலூர்,

திருக்கோவிலூர் அருகே உள்ள எடப்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் அப்துல்ஜப்பார்(வயது 60). இவர், ரிஷிவந்தியம் போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக வேலை பார்த்து ஓய்வுபெற்றார். தற்போது அப்துல்ஜப்பார், திருக்கோவிலூர் என்.ஜி.ஜி.ஓ. நகரில் வசித்து வருகிறார். இவர் திருக்கோவிலூரில் உள்ள 2 வங்கிகளில் கணக்கு வைத்துள்ளார்.

இந்த நிலையில் அப்துல்ஜப்பாரின் செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர், வங்கியில் இருந்து பேசுவதாகவும், உங்களது வங்கி கணக்கில் ஆதார் எண் இணைக்க உள்ளோம். தற்போது உங்களது செல்போன் எண்ணுக்கு குறுஞ்செய்தி ஒன்று வரும், அதில் உள்ள ஓ.டி.பி. எண்ணை கூற வேண்டும் என்றார்.

அதன்படி அப்துல்ஜப்பார் செல்போனுக்கு வந்த குறுஞ்செய்தியில் இருந்த ஓ.டி.பி. எண்ணை அவர் கூறி உள்ளார். அடுத்த நிமிடத்தில் அப்துல்ஜப்பாரின் செல்போனுக்கு மற்றொரு குறுஞ்செய்தி வந்தது. அதில் அவரது வங்கி கணக்கில் இருந்து ரூ.5 ஆயிரம் எடுக்கப்பட்டுள்ளதாக இருந்தது.

இதேபோல் அவரது மனைவி ரொக்காயபீவியின் செல்போனிலும் மர்மநபர் பேசினார். அடுத்த நிமிடத்தில் அவரது வங்கி கணக்கில் இருந்து ரூ.2 ஆயிரத்து 500 எடுக்கப்பட்டதாக செல்போனுக்கு குறுஞ்செய்தி வந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த கணவன், மனைவி இருவரும் சம்பந்தப்பட்ட வங்கிக்கு சென்று மேலாளரிடம் கேட்டனர். அதற்கு அவர், வங்கியில் இருந்து யாரும் பேசவில்லை. வங்கி அதிகாரி பேசுவதாக மர்மநபர் கூறி கணக்கில் இருந்து பணத்தை அபேஸ் செய்துள்ளார். இது தொடர்பாக போலீஸ் நிலையத்தில் புகார் கொடுங்கள் என்றார்.

இதையடுத்து திருக்கோவிலூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. இது தொடர்பாக விசாரணை நடத்தி, செல்போனில் பேசி வங்கி கணக்கில் இருந்த பணத்தை அபேஸ் செய்தவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். 

Next Story