ஒடுக்கப்பட்டோரின் உரிமையை பறிக்க நினைப்போரை வேரறுப்போம்: நாராயணசாமி திட்டவட்டம்


ஒடுக்கப்பட்டோரின் உரிமையை பறிக்க நினைப்போரை வேரறுப்போம்: நாராயணசாமி திட்டவட்டம்
x
தினத்தந்தி 14 April 2018 4:00 AM IST (Updated: 14 April 2018 12:24 AM IST)
t-max-icont-min-icon

ஒடுக்கப்பட்டோரின் உரிமையை பறிக்க நினைப்போரை வேரறுப்போம் என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறியுள்ளார்.

புதுச்சேரி,

அம்பேத்கரின் பிறந்தநாளையொட்டி முதல்-அமைச்சர் நாராயணசாமி விடுத்துள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:-

உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவின் அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கிய அம்பேத்கரின் பிறந்தநாள் இன்று (சனிக்கிழமை) கொண்டாடப்படுகிறது. சமூக ஏற்றத்துக்கும், மாற்றத்துக்கும் வித்திட்ட பெரும் புரட்சிக்கு சொந்தக்காரர் அம்பேத்கர். சமூக நீதிக்காக தன்வாழ்நாள் முழுவதும் போராடிய புரட்சியாளர். தாழ்த்தப்பட்ட மக்கள் தலைநிமிர்ந்து வாழ அவர் கண்ட கனவுகளும், அவற்றினை நனவாக்க அவர் மேற்கொண்ட போராட்டங்களும் ஏராளம்.

ஒடுக்கப்பட்ட மக்களின் உயர்வுக்காக ஓயாது உழைத்த அம்பேத்கர் வெற்றியோ, தோல்வியோ எதுவரினும் கடமையை செய்வோம் என்கிற கொள்கையோடு வாழ்ந்தவர். சமூக நீதிக்காக மன உறுதியோடு போராடிய அவர் பலிபீடத்தில் வெட்டப்படுபவை ஆடுகள்தான் சிங்கங்கள் அல்ல. எனவே சிங்கங்களாக இருங்கள் என்று ஒடுக்கப்பட்டவர்களுக்கு உரமூட்டினார்.

ஒடுக்கப்பட்ட மக்களுக்காக அவர் அளித்த பாதுகாப்பு கவசங்களை பறித்துவிட ஒரு கூட்டம் துடித்துக்கொண்டிருந்தது. அம்பேத்கர் ஊட்டிய உரம் இன்னும் இந்த மண்ணில் காய்ந்துபோய்விடவில்லை என்பதை அவர்கள் உணரவில்லை. அதை அவர்களுக்கு நாம் உணர்த்தும் நாளும் வெகுதொலைவில் இல்லை.

அம்பேத்கரின் பிறந்தநாளில் சமூக நீதியை காக்கவும், ஒடுக்கப்பட்டோரின் உரிமைகளை பேணி பாதுகாக்கவும், இவற்றை பறிக்க நினைப்பவர்களை வேரறுக்கவும் நாம் உறுதியேற்க வேண்டும்.

இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

Next Story