கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவிலில் பங்குனி திருவிழா தேரோட்டம் திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்
கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவிலில் பங்குனி திருவிழா தேரோட்டம் நடந்தது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து தேர் இழுத்தனர்.
கோவில்பட்டி,
கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவிலில் பங்குனி திருவிழா தேரோட்டம் நடந்தது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து தேர் இழுத்தனர்.
செண்பகவல்லி அம்மன் கோவில்
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் உடனுறை பூவனநாத சுவாமி கோவிலில் பங்குனி திருவிழா கடந்த 5–ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து 11 நாட்கள் நடைபெறும் விழாவில் தினமும் காலை, மாலையில் சுவாமி– அம்பாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா செல்கின்றனர். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மண்டகபடிதாரர் சார்பில் விழா நிகழ்ச்சிகள் நடக்கின்றன.
விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம், 9–ம் திருநாளான நேற்று கம்மவார் சங்கம் சார்பில் நடந்தது. அதிகாலையில் நடை திறக்கப்பட்டு, திருவனந்தல் பூஜை நடந்தது. பின்னர் சுவாமி– அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. காலையில் சுவாமியும், அம்பாளும் தனித்தனி தேர்களில் எழுந்தருளினர். பின்னர் ரதாரோகனம் பூஜை நடந்தது. தொடர்ந்து கம்மவார் திருமண மண்டபத்தில் இருந்து கம்மவார் சங்கத்தினர், இளைஞர் அணியினர் மற்றும் பொதுமக்கள் செண்டைமேளம் முழங்க, ஊர்வலமாக தேர்வடம் பிடிக்க புறப்பட்டு சென்றனர்.
தேரோட்டம்
காலை 9.10 மணிக்கு சுவாமி எழுந்தருளிய தேரோட்டம் தொடங்கியது. கம்மநாயுடு மகாஜன சங்க மாநில தலைவர் ரவீந்திரன் தலைமையில், அமைச்சர் கடம்பூர் ராஜூ, கலெக்டர் வெங்கடேஷ், போலீஸ் சூப்பிரண்டு மகேந்திரன், கே.ஆர்.கல்வி நிறுவனங்களின் நிர்வாக இயக்குனர் கே.ஆர்.அருணாசலம் ஆகியோர் வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர்.
கோவில் முன்பு இருந்து புறப்பட்ட தேரானது நான்கு ரதவீதிகளையும் சுற்றி நிலையை அடைந்தது. சுவாமி தேரை தொடர்ந்து அம்பாள் தேரும் இழுக்கப்பட்டது.
சுவாமி– அம்பாள் வீதிஉலா
விழாவில் கோவில்பட்டி உதவி கலெக்டர் அனிதா, நகரசபை ஆணையாளர் அச்சையா, முன்னாள் எம்.எல்.ஏ. சின்னப்பன், பி.எஸ்.ஆர். கல்வி குழும தாளாளர் சோலைச்சாமி, கம்மவார் சங்க தலைவர் ரீஜென்ட் அரிபாலகன், செயலாளர் ராமமூர்த்தி, துணை தலைவர் ராமச்சந்திரன், இணை செயலாளர் பட்டுராஜன், பொருளாளர் நாராயணசாமி, சென்னை கம்மவார் கல்வி அறக்கட்டளை தலைவர் ஆதி நாராயணசாமி, கம்மவார் சங்க முன்னாள் தலைவர்கள் சீனிவாசன், துரைராஜ்,கோவில் உதவி ஆணையர் ரோஜாலி சுமதா, கோவில் நிர்வாக அலுவலர் பாலசுப்பிரமணிய ராஜன், கோவில் ஆய்வாளர் முத்துராமலிங்கம், உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து தேர் இழுத்து, சாமி தரிசனம் செய்தனர்.
தேரோட்டத்தின்போது லேசான மழை பெய்தது. மழையில் நனைந்தவாறு பக்தர்கள் வடம் பிடித்து தேரை உற்சாகமாக இழுத்தனர். தேர் தடி முறைதாரர் மூப்பன்பட்டி வீரபாண்டியன் தலைமையில், இளைஞர்கள் தேருக்கு தடி போட்டனர்.
இரவில் சுவாமி யானை வாகனத்திலும், அம்பாள் அன்ன வாகனத்திலும் எழுந்தருளி திருவீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இரவில் கம்மவார் சங்க அலுவலகம் முன்பு இன்னிசை நிகழ்ச்சி நடந்தது. கோவில்பட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெபராஜ் தலைமையில், ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
நாளை, தெப்பத் திருவிழா
10–ம் திருநாளான இன்று (சனிக்கிழமை) மாலை 6 மணிக்கு ஆயிரவைசிய காசுக்கார செட்டி பிள்ளைகள் சங்கம் சார்பில், தீர்த்தவாரி தீபாராதனை நடக்கிறது.
விழாவின் நிறைவு நாளான நாளை (ஞாயிற்றுக்கிழமை) இரவில் நாடார் உறவின்முறை சங்கம் சார்பில், தெப்பத் திருவிழா நடக்கிறது. இரவில் நாடார் காமராஜ் மெட்ரிக் பள்ளிக்கூட வளாகத்தில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. அடைக்கலம்காத்தான் மண்டபம் முன்பு இன்னிசை நிகழ்ச்சி நடக்கிறது.
ஏற்பாடுகளை நாடார் உறவின்முறை சங்க தலைவர் பழனிசெல்வம், துணை தலைவர் செல்வராஜ், செயலாளர் ஜெயபாலன், பொருளாளர் சுரேஷ், பத்திரகாளி அம்மன் கோவில் தர்மகர்த்தா சின்ன மாடசாமி, தெப்பத்திருவிழா கமிட்டி உறுப்பினர்கள் மாணிக்கம், முருகன் மற்றும் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.
Related Tags :
Next Story