கொல்லைப்புறமாக பதவிக்கு வந்தவர் என்னை குற்றஞ்சாட்டுவதா? நாராயணசாமி மீது ரங்கசாமி பாய்ச்சல்


கொல்லைப்புறமாக பதவிக்கு வந்தவர் என்னை குற்றஞ்சாட்டுவதா? நாராயணசாமி மீது ரங்கசாமி பாய்ச்சல்
x
தினத்தந்தி 14 April 2018 4:30 AM IST (Updated: 14 April 2018 12:46 AM IST)
t-max-icont-min-icon

கொல்லைப்புறமாக ஆட்சிக்கு வந்துவிட்டு என்னை குறைகூறுவதா? என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி மீது ரங்கசாமி குற்றஞ்சாட்டினார்.

புதுச்சேரி,

புதுவை முன்னாள் முதல்-அமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான ரங்கசாமி நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அதன் விவரம் வருமாறு:-

கேள்வி:- நீங்கள் குறுக்கு வழியில் ஆட்சியை பிடிக்க முயற்சிப்பதாக முதல்-அமைச்சர் நாராயணசாமி குற்றஞ்சாட்டியுள்ளாரே?

பதில்:- நான் என்.ஆர்.காங்கிரஸ் என்ற ஒரு கட்சியை உருவாக்கி முதல்-அமைச்சர் ஆனவன். இப்போதும் எங்கள் கட்சிக்கு 8 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். எனக்கு குறுக்கு வழியில் பதவிக்கு வரவேண்டிய அவசியமில்லை.

நான் காங்கிரஸ் கட்சியில் முதல்-அமைச்சராக இருந்தபோது என்னை இறக்கிவிட்டு குறுக்கு வழியில் வந்தவர்கள் எல்லாம் உள்ளனர். கொல்லைப்புறமாக நான் பலரை வேலைக்கு அமர்த்தினேன் என்றும் குற்றஞ்சாட்டினார்கள். நாங்கள் வேலைக்கு வைத்தவர்களுக்கு எல்லாம் சம்பளம் கொடுத்தோம். ஆனால் இந்த அரசு ஊழியர் களுக்கு பல மாதங்களாக சம்பளம் வழங்கவில்லை.

எத்தனையோ ஆண்டுகள் நான் முதல்-அமைச்சராக இருந்துள்ளேன். அப்போது எவ்வளவோ திட்டங்களை செயல்படுத்தி உள்ளேன். யார் கொல்லைப்புறமாக பதவிக்கு வந்தார்கள் என்பது மக்களுக்கு தெரியும். ஆனால் கொல்லைப்புறமாக முதல்- அமைச்சர் பதவிக்கு வந்தவர்கள் என்னை குறை கூறுகிறார்கள். இது எல்லாம் மக்களுக்கும், உங்களுக்கும் தெரியும்.

கேள்வி:- பாரதீய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷாவை சந்தித்தபோது காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தினீர்களா?

பதில்:- அது ஒரு மரியாதை நிமித்தமான சந்திப்பு.

கேள்வி:- பஸ் கட்டண உயர்வு உள்ளிட்ட மக்கள் பாதிக்கப்படும் பிரச்சினைகளில் என்.ஆர்.காங்கிரஸ் அமைதியாக உள்ளதே?

பதில்: குப்பைக்குகூட இந்த அரசு வரி போட்டுள்ளது. அதுபோன்ற வரி உயர்வுகளை கண்டித்துதான் சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தோம். என்.ஆர்.காங்கிரஸ் மக்கள் பிரச்சினைகளில் அவ்வப்போது உரிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இவ்வாறு ரங்கசாமி கூறினார்.

Next Story