நெல்லை மாவட்டத்தில் இடி–மின்னலுடன் கனமழை: குற்றாலம் அருவிகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு மின்னல் தாக்கி அந்தோணியார் ஆலய கோபுரம் சேதம்


நெல்லை மாவட்டத்தில் இடி–மின்னலுடன் கனமழை:  குற்றாலம் அருவிகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு  மின்னல் தாக்கி அந்தோணியார் ஆலய கோபுரம் சேதம்
x
தினத்தந்தி 14 April 2018 2:45 AM IST (Updated: 14 April 2018 1:11 AM IST)
t-max-icont-min-icon

நெல்லை மாவட்டத்தில் இடி–மின்னலுடன் கனமழை பெய்தது. இதையொட்டி குற்றாலம் அருவிகளுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது.

நெல்லை, 

நெல்லை மாவட்டத்தில் இடி–மின்னலுடன் கனமழை பெய்தது. இதையொட்டி குற்றாலம் அருவிகளுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது. மின்னல் தாக்கி அந்தோணியார் ஆலய கோபுரம் சேதம் அடைந்தது.

விடிய, விடிய மழை 

நெல்லை மாவட்டத்தில் கடந்த 8–ந்தேதி முதல் கோடை மழை பெய்து வருகிறது. தினமும் ஆங்காங்கே பலத்த மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு விடிய, விடிய மழை பெய்தது. நெல்லையில் நேற்று பகலில் வானம் மேக மூட்டமாக காட்சி அளித்தது. அவ்வப்போது வெயில் முகம் காட்டியது.

பிற்பகல் 2 மணி அளவில் கருமேகங்கள் சூழ்ந்தன. பின்னர் சிறிது நேரம் கனமழை பெய்தது. இதனால் நெல்லை சந்திப்பு பஸ் நிலையம், சிந்துபூந்துறை மற்றும் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. இதனால் வாகனங்கள் மழைநீரில் மெதுவாக சென்றன.

குற்றாலம் அருவிகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு 

கடந்த 2 நாட்களாக தென்காசி மற்றும் குற்றாலம் பகுதிகளில் இரவில் பலத்த மழை பெய்தது. இதனால் குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம், புலியருவி ஆகிய அனைத்து அருவிகளிலும் தண்ணீர் வர தொடங்கியது.

மழை காரணமாக நேற்று காலையில் இருந்தே அனைத்து அருவிகளிலும் தண்ணீர் வரத்து அதிகரித்தது. ஐந்தருவியில் 5 கிளைகளிலும் தண்ணீர் விழுகிறது. மெயின் அருவியில் தண்ணீர் பரவலாக விழுகிறது. இதே போல் பழைய குற்றாலம், புலியருவியிலும் தண்ணீர் நன்றாக விழுகிறது. நீர்வரத்து அதிகரித்து உள்ளதை அறிந்த சுற்றுலா பயணிகள் நேற்று குற்றாலத்தில் குவிந்தனர். அவர்கள் அனைத்து அருவிகளிலும் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.

சுவர் இடிந்து முதியவர் காயம் 


சங்கரன்கோவில் அருகே உள்ள பெரியகோவிலான்குளம் கிராமம் வடக்குத்தெருவை சேர்ந்தவர் கோவிந்தசாமி (வயது 70) விவசாயி. அவருடைய மனைவி பேச்சியம்மாள் (65). கோவிந்தசாமி மட்டும் வீட்டில் தனியாக இருந்தார்.

அப்போது பெய்த பலத்த மழையால் இவரது வீட்டை ஒட்டி உள்ள சுவர் நனைந்து பலம் இழந்து இருந்தது. எதிர்பாராதவிதமாக அந்த சுவர் இடிந்து கோவிந்தசாமியின் வீட்டு மேற்கூரையில் விழுந்தது. இதில் மேற்கூரை சேதமடைந்ததில் கோவிந்தசாமி இடிபாடுகளுக்குள் சிக்கி படுகாயம் அடைந்தார். நீண்ட நேரத்துக்கு பிறகு கோவிந்தசாமி இடிபாடுகளுக்குள் சிக்கி இருந்ததை அந்த பகுதி மக்கள் பார்த்தனர். பின்னர் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சங்கரன்கோவில் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இதுபற்றி சின்னகோவிலான்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆலய கோபுரம் சேதம் 

திசையன்விளை, உவரி, கூட்டப்பனை பகுதியில் நேற்று முன்தினம் இரவு இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. இதில் மின்னல் தாக்கியதில் கூட்டப்பனை அந்தோணியார் ஆலய கோபுரத்தின் மேல்பகுதி சேதம் அடைந்தது.

தொடர் மழையால் நெல்லை மாவட்டத்தில் உள்ள அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது. பாபநாசம் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 35 கனஅடி வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து 20 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது. சேர்வலாறு அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 136 கன அடியாக அதிகரித்தது. மணிமுத்தாறு அணைக்கு வினாடிக்கு 32 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக தாமிரபரணி ஆற்றில் வினாடிக்கு 200 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

இதே போல் கடனா நதி, ராமநதி, கருப்பாநதி, அடவிநயினார் ஆகிய அணைகளுக்கு தண்ணீர் வரத்து சற்று அதிகரித்து உள்ளது.

மழை அளவு 

நெல்லை மாவட்டத்தில் நேற்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:–

மணிமுத்தாறு –6, ராமநதி –24, கருப்பாநதி –38, குண்டாறு –20, அடவிநயினார் –23.

அம்பை –3, ஆய்குடி –24, சேரன்மாதேவி –16, பாளையங்கோட்டை–21, சங்கரன்கோவில் –21, செங்கோட்டை –44, சிவகிரி –65, தென்காசி –30, நெல்லை –13.40.

நெல்லை மாவட்டத்தில் சிவகிரி பகுதியில் அதிகபட்சமாக 65 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story