பரமக்குடி அருகே கமி‌ஷன் கடைக்காரரை தாக்கி கொலை மிரட்டல் 2 பேர் கைது


பரமக்குடி அருகே கமி‌ஷன் கடைக்காரரை தாக்கி கொலை மிரட்டல் 2 பேர் கைது
x
தினத்தந்தி 14 April 2018 3:30 AM IST (Updated: 14 April 2018 1:44 AM IST)
t-max-icont-min-icon

பரமக்குடி அருகே கமி‌ஷன் கடைக்காரரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக 4 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதுதொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

பரமக்குடி,

பரமக்குடி பாரதிநகர் பால்பண்ணை தெருவை சேர்ந்த சேசு என்பவருடைய மகன் மாணிக்கம் (வயது 33). இவர் பகவத்சிங் சாலையில் மிளகாய் மற்றும் நவதானியம் கமி‌ஷன் கடை வைத்துள்ளார். இவருக்கும் பரமக்குடியை சேர்ந்த ஜேம்ஸ் மகன் அமெரிக்காவில் பணியாற்றும் சகாயம் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது.

அதனை தொடர்ந்து இருவரும் அடிக்கடி தொலைபேசியில் பேசி வந்துள்ளனர். இந்த நிலையில் சகாயம் பரமக்குடியில் உள்ள மாணிக்கத்திடம் போன் செய்து பணம் தருகிறேன். அதன் மூலம் நிறைய மிளகாய் வாங்கி குடோன் வைத்து வியாபாரம் செய்யுமாறு கூறியிருந்தாராம். அதனைதொடர்ந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு மாணிக்கத்திற்கு மீண்டும் சகாயம் போன் செய்து 2 நபர்களிடம் பணம் கொடுத்து அனுப்பி உள்ளேன். அதனை பெற்றுக்கொண்டு மிளகாய் வாங்கி சேமித்து வைக்கும்படி கூறினாராம்.

இந்த நிலையில் சத்திரக்குடியை அடுத்துள்ள அரியகுடி கிராமத்தை சேர்ந்த கார்த்திக் பாண்டியன்(30), மகேந்திர பாண்டியன், வேலு மகன் சந்திரசேகர்(27) ஆகிய 3 பேரும் மாணிக்கம் வீட்டிற்கு சென்று சகாயம் அனுப்பி வைத்ததாக கூறி அறிமுகம் செய்துள்ளனர். பின்னர் அவரை மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்றுள்ளனர். சிறிது தூரம் சென்றதும் மாணிக்கத்தை மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே இறக்கி அடித்து உதைத்து கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

மேலும் அவர் வைத்திருந்த செல்போனையும் அவர்கள் பறித்துச்சென்று விட்டனராம். இதுகுறித்து மாணிக்கம் பரமக்குடி நகர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் சகாயம் உள்பட 4 பேர் மீது போலீஸ் இன்ஸ்பெக்டர் அமுதா வழக்கு பதிவு செய்துள்ளார்.

மேலும் இந்த சம்பவம் தொடர்பாக கார்த்திக் பாண்டியன், சந்திரசேகர் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் சகாயம், மாணிக்கத்தின் முகநூலில் இருந்து முக்கிய பிரமுகர்கள் உள்பட பல்வேறு நபர்கள் பற்றி அவதூறாக செய்திகளை பரப்பி வந்தது தெரியவந்துள்ளது. இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story