நகை அடகுக்கடைக்காரர் கொலை: முக்கிய குற்றவாளிகளை காவலில் எடுத்து போலீசார் விசாரணை


நகை அடகுக்கடைக்காரர் கொலை: முக்கிய குற்றவாளிகளை காவலில் எடுத்து போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 14 April 2018 4:15 AM IST (Updated: 14 April 2018 1:44 AM IST)
t-max-icont-min-icon

நகை அடகுக்கடைக்காரர் கொலையில் முக்கிய குற்றவாளிகள் 3 பேரை 5 நாள் காவலில் எடுத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதுச்சேரி,

புதுவை ரெயின்போ நகரை சேர்ந்த ராஜேஷ் ஷியாம் தூத். நெல்லித்தோப்பு சிக்னல் அருகே அடகு கடை நடத்தி வந்தார். கடந்த 5.4.2014 அன்று கடையில் இருந்தபோது அங்கு வந்த கும்பலால் கொலை செய்யப்பட்டார். அவரது அடகு கடையில் இருந்த 9 கிலோ நகைகளை கொள்ளையடித்துக் கொண்டு அந்த கும்பல் தப்பிச் சென்றது.

இந்த கொலை, கொள்ளை குறித்து உருளையன்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். இந்த சம்பவத்தில் 4 ஆண்டுகளுக்குப் பின் துப்பு துலங்கியது.

இதைத்தொடர்ந்து சம்பவம் நடந்த அடகுகடை அருகே உள்ள சிமெண்டு கடையில் டிரைவராக வேலைபார்த்து வந்த ஜீவானந்தபுரம் மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்த கோபி(வயது 30) சுப்பையா நகரை சேர்ந்த அருண்(30), கங்கையம்மன்கோவில் வீதியை சேர்ந்த ஜோதி(29) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். கொள்ளையடித்த நகைகளை விற்க உதவிய கோபியின் மாமா கோகுலகிருஷ்ணன், நகை அடகுகடைக்காரர் அஜீஸ் சேட் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். விசாரணைக்குப்பின் இவர்கள் 5 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு காலாப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்த வழக்கில் முக்கிய குற்றவாளிகளான கோபி, அருண், ஜோதி ஆகிய 3 பேரையும் காவலில் எடுத்து விசாரணை நடத்த அனுமதி கோரி உருளையன்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் தனசெல்வம் புதுவை கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இதனை ஏற்று முக்கிய குற்றவாளிகள் 3 பேரை 5 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க கோர்ட்டு அனுமதி வழங்கியது. இதன்பேரில் கோபி, அருண், ஜோதி ஆகிய 3 பேரையும் போலீசார் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story