முத்து மாரியம்மன் கோவில் பங்குனி திருவிழா: சாட்டையால் அடித்து பேய் விரட்டும் நிகழ்ச்சி


முத்து மாரியம்மன் கோவில் பங்குனி திருவிழா: சாட்டையால் அடித்து பேய் விரட்டும் நிகழ்ச்சி
x
தினத்தந்தி 14 April 2018 4:00 AM IST (Updated: 14 April 2018 1:48 AM IST)
t-max-icont-min-icon

கிருஷ்ணகிரி அருகே முத்து மாரியம்மன் கோவில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு சாட்டையால் அடித்து பேய் விரட்டும் நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி அருகே சின்ன மேலுப்பள்ளி கிராமத்தில் முத்து மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் பங்குனி திருவிழா விமரிசையாக நடந்தது. விழாவையொட்டி அம்மனுக்கு சிறப்பு பூஜைகளுடன் காப்பு கட்டுதல், மண்டல பூஜைகள், அம்மன் திருக்கல்யாணம், கஞ்சி வார்த்தல் மற்றும் பல்வேறு பூஜைகள் நடைபெற்றன.

இதன் தொடர்ச்சியாக மாவிளக்கு ஊர்வலம், அம்மன் ஊஞ்சல் உற்சவம் ஆகியவை நடந்தது. இதில் சின்ன மேலுப்பள்ளி, மேல்பட்டி, காமராஜர்புரம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு மாவிளக்கு எடுத்து ஊர்வலமாக வந்தனர். தொடர்ந்து முத்து மாரியம்மன் சிறப்பு அலங்காரத்துடன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

இதைத் தொடர்ந்து பெண் பக்தர்கள் மாவிளக்கில் தீபம் ஏற்றி வழிபட்டனர். விழாவை முன்னிட்டு ஆடு, கோழிகள் பலியிடப்பட்டு நேர்த்திக்கடன் செலுத்தப்பட்டது. முன்னதாக கோவிலின் முன்பாக பேய் விரட்டும் நிகழ்ச்சி நடந்தது. இதில் கோவில் பூசாரி சாட்டையால் அடிக்க பக்தர்கள் கைகளை உயர்த்தியவாறு நின்று சாட்டையடி வாங்கி கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

Next Story