கோவையில் பட்டப்பகலில் கடைக்குள் புகுந்து கத்தி முனையில் வியாபாரி மனைவியிடம் நகை பறிப்பு


கோவையில் பட்டப்பகலில் கடைக்குள் புகுந்து கத்தி முனையில் வியாபாரி மனைவியிடம் நகை பறிப்பு
x
தினத்தந்தி 14 April 2018 3:00 AM IST (Updated: 14 April 2018 1:58 AM IST)
t-max-icont-min-icon

கோவையில் பட்டப்பகலில் கடைக்குள் புகுந்து கத்தி முனையில் வியாபாரி மனைவியிடம் நகை பறித்த மர்ம ஆசாமியை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

கோவை,

கோவை ராமநாதபுரம் ரூபா நகரில் உள்ள காமாட்சியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் ராம்குமார் (வயது 35). இவருடைய மனைவி பிரிஸ்கில்லா (32). இவர் கோவையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் நர்சாக பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம் ராம்குமார் தனது கடையில் வியாபாரத்தில் ஈடுபட்டு கொண்டு இருந்தார். அப்போது கடையில் திடீரென்று முட்டை தீர்ந்து விட்டது.

எனவே அவர் தனது மனைவி பிரிஸ்கில்லாவை வியாபாரத்தை பார்த்துக்கொள்ளும்படி கூறிவிட்டு, முட்டை வாங்க சென்றார். இதனால் பிரிஸ்கில்லா கடையில் வியாபாரத்தை கவனித்துக்கொண்டு இருந்தார். மதியம் 2 மணியளவில் அந்த கடையில் யாரும் இல்லை. அப்போது 30 வயது மதிப்புள்ள ஒருவர் கடைக்கு வந்தார்.

பின்னர் அவர் பிரிஸ்கில்லாவிடம் குளிர்பானம் கொடுங் கள் என்று கூறினார். அவரும் குளிர்பானத்தை கொடுத்ததும், அந்த நபர் அதை வாங்கி குடித்தார். பிறகு அவர் திடீரென்று கடைக்குள் புகுந்து, கத்தியை காட்டி மிரட்டி பிரிஸ்கில்லா அணிந்திருந்த 5 பவுன் தாலி சங்கிலி மற்றும் ஒரு ஜோடி கம்மல் ஆகியவற்றை பறித்தார்.

அவர் கடையை விட்டு சென்றதும் பிரிஸ்கில்லா திருடன், திருடன் என்று கத்தினார். உடனே அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடி வந்தனர். ஆனால் அதற்குள் அந்த ஆசாமி அங்கிருந்து தப்பிச்சென்றார். இது குறித்து ராமநாதபுரம் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள்.

மேலும் போலீசார் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அத்துடன் அந்தப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் அந்த மர்ம ஆசாமியின் உருவம் பதிவாகி உள்ளதா? என்று ஆய்வு செய்து வருவதுடன், அந்த ஆசாமியை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள். கோவையில் பட்டப்பகலில் கடை வியாபாரி மனைவியிடம் நகை பறித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Next Story