100 நாள் வேலை வழங்கும் திட்டத்தில் தினக்கூலி ரூ.400 வழங்க கோரி ஆர்ப்பாட்டம்


100 நாள் வேலை வழங்கும் திட்டத்தில் தினக்கூலி ரூ.400 வழங்க கோரி ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 14 April 2018 3:30 AM IST (Updated: 14 April 2018 1:58 AM IST)
t-max-icont-min-icon

100 நாள் வேலை வழங்கும் திட்டத்தில் பயனாளிகளுக்கு தினக்கூலியாக ரூ.400 வழங்க கோரி கூடலூரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கூடலூர்,

கூடலூர் ஊராட்சி ஒன்றிய குழு அலுவலகத்தின் கட்டுப்பாட்டில் ஸ்ரீமதுரை, சேரங்கோடு, நெலாக்கோட்டை ஊராட்சிகளில் 100 நாள் வேலை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு உள்ளது. இந்த திட் டத்தின் கீழ் கூடலூர் தாலுகா ஸ்ரீமதுரை ஊராட்சியில் சுமார் 350 பேர் வேலை பார்த்து வருகின்றனர். இவர்களுக்கு தினக்கூலியாக ரூ.205 வழங்கப்படுகிறது. ஆனால் கடந்த 2 மாதமாக கூலி வழங்கப்பட வில்லை என கூறப்படுகிறது. மேலும் பயனாளிகளுக்கு 100 நாட்கள் வேலை வழங்குவது இல்லை என புகார் எழுந்துள்ளது.

இந்த நிலையில், நாடு முழுவதும் 100 நாள் வேலை வழங்கும் திட்டத்தை மத்திய அரசு முறையாக செயல்படுத்த வேண்டும். இத்திட்டத்தில் பதிவு செய்த அனைவருக்கும் வேலை வழங்க வேண்டும். மேலும் 100 நாட்களுக்கு பதிலாக 200 நாட்கள் வேலை வழங்க வேண்டும். தினக்கூலியாக ரூ.400 வழங்க வேண்டும். வேலை செய்த நாட்களுக்கான கூலியை அன்றைய தினமே வழங்க வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் கூடலூர் ஊராட்சி ஒன்றிய குழு அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.

அதன்படி கூடலூர் தாலுகா அலுவலகம் முன்பு நேற்று மதியம் 12 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. இதற்கு விவசாயிகள் சங்க மாவட்ட துணை செயலாளர் முருகன் தலைமை தாங்கினார். ஆதி வாசி அமைப்பு செயலாளர் சி.கே.மணி, கூடலூர் செயலாளர் குஞ்சுமுகமது, சி.ஐ.டி.யூ. மாநில செயலாளர் கோபிகுமார், மாதர் சங்க நிர்வாகிகள் விலாசினி, சசிகலா, கவுசல்யா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாவட்ட குழு உறுப்பினர் அரவிந்தன், நிர்வாகி பன்னீர்செல்வம், இளைஞர் பெருமன்ற நிர்வாகி அமிர்தா, சி.ஐ.டி.யு. நிர்வாகி சுரேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது அவர்கள், கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.

இது குறித்து 100 நாள் வேலை வழங்கும் திட்ட பயனாளிகள் கூறுகையில், ஸ்ரீமதுரை ஊராட்சியில் பணியாற்றும் பயனாளிகளுக்கு 100 நாட்கள் வேலை வழங்கப்படுவது இல்லை. வேலை செய்த தொழிலாளர்களுக்கு 2 மாதமாக கூலி வழங்கப்பட வில்லை. இது குறித்து அதிகாரிகளிடம் கேட்டால் உரிய விளக்கம் அளிப்பது இல்லை என்றனர்.

Next Story