பழனி முருகன் கோவிலில் முதலாவது மின் இழுவை ரெயில் சேவை மீண்டும் தொடங்கியது
பராமரிப்பு பணிகள் நிறைவடைந்ததையடுத்து பழனி முருகன் கோவிலில் மின் இழுவை ரெயில் சேவை நேற்று மீண்டும் தொடங்கியது. முன்னதாக சிறப்பு பூஜைகள் நடந்தது.
பழனி,
பழனி முருகன் கோவிலுக்கு வரும் பக்தர்களை அடிவாரம் பகுதியில் இருந்து மலைக்கோவிலுக்கு கொண்டு செல்வதற்காக மின் இழுவை ரெயில் நிலையம், ரோப்கார் சேவை ஆகியவை உள்ளது. இதில் மின் இழுவை ரெயில் நிலையத்தில் முதலாம் எண், 2-ம் எண், 3-ம் எண் என 3 மின் இழுவை ரெயில்கள் இயக்கப்படுகின்றன.
இதற்காக அடிவாரம் பகுதியில் இருந்து மலைக்கோவிலுக்கு தண்டவாள வழித்தடங்களும் அமைக்கப்பட்டுள்ளன. இதில் முதலாம் எண் மின் இழுவை ரெயில் பராமரிப்பு பணிக்காக கடந்த மாதம் (மார்ச்) 12-ந்தேதி நிறுத்தப்பட்டது. அதையடுத்து ரெயிலை மேல்நோக்கி இழுக்கும் எந்திரம், கம்பி வடம், ரெயில் பெட்டிகளின் சக்கரங்கள் ஆகியவை ஆய்வு செய்யப்பட்டது.
மேலும் அவற்றின் உறுதித்தன்மையும் பரிசோதிக்கப்பட்டது. பின்னர் தண்டவாளத்துக்கு அடியில் பதிக்கப்பட்டுள்ள மரப்பலகைகளை அகற்றிவிட்டு அதற்கு பதிலாக சிமெண்டால் செய்யப்பட்ட பலகைகள் பதிக்கப்பட்டன. அதையடுத்து மின் இழுவை ரெயிலின் மற்ற பாகங்கள் சோதனை செய்யப்பட்டு தேய்மானம் அடைந்த பகுதிகள் அகற்றப்பட்டு அவற்றுக்கு பதிலாக புதிய பாகங்கள் பொருத்தப்பட்டன.
அனைத்து பணிகளும் நிறைவடைந்து மின் இழுவை ரெயில் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. சோதனை ஓட்டம் வெற்றியடைந்ததையடுத்து நேற்று முதல் முதலாம் எண் மின் இழுவை ரெயில் சேவை மீண்டும் பக்தர்கள் பயன்பாட்டுக்கு வந்தது.
முன்னதாக காலை 9 மணிக்கு மின் இழுவை ரெயிலுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது.
இந்த பூஜைகளை பட்டத்து குருக்கள் செல்வசுப்பிரமணி செய்தார். இந்த நிகழ்ச்சியில் கோவில் இணை ஆணையர் செல்வராஜ், துணை ஆணையர் செந்தில்குமார் மற்றும் கோவில் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story