மாணவர்கள் தீயசக்திகளை முறியடிக்க தயாராக இருக்கவேண்டும், கல்வித்துறை செயலாளர் அன்பரசு வேண்டுகோள்


மாணவர்கள் தீயசக்திகளை முறியடிக்க தயாராக இருக்கவேண்டும், கல்வித்துறை செயலாளர் அன்பரசு வேண்டுகோள்
x
தினத்தந்தி 14 April 2018 3:00 AM IST (Updated: 14 April 2018 2:16 AM IST)
t-max-icont-min-icon

மாணவர்கள் தீய சக்திகளை முறியடிக்க தயாராக இருக்கவேண்டும் என்று கல்வித்துறை செயலாளர் அன்பரசு வேண்டுகோள் விடுத்தார்.

காலாப்பட்டு,

புதுவை என்ஜினீயரிங் கல்லூரியின் 13-வது பட்டமளிப்பு விழா கல்லூரி அரங்கத்தில் நேற்று நடந்தது. விழாவில் வளர்ச்சி ஆணையரும், கல்வித்துறை செயலாளருமான அன்பரசு கலந்துகொண்டு 218 பேருக்கு இளநிலை பட்டங்களையும், 131 பேருக்கு முதுநிலை பட்டங்களையும் வழங்கினார்.

அப்போது கல்வித்துறை செயலாளர் அன்பரசு பேசியதாவது:-

பட்டம் பெறுகின்ற மாணவர்கள் சிறந்த நாட்டுப்பற்று உடையவர்களாக விளங்க வேண்டும். மேலும் தங்கள் பெற்றோர்கள் செய்த தியாகங்களை நினைவில் கொள்ள வேண்டும். அதைப்போன்ற தியாகங்கள் செய்யவும் தயாராக இருக்கவேண்டும்.

அப்போதுதான் சாதி, மதம் மற்றும் பிராந்திய பேதமற்ற சமத்துவ சமுதாயத்தை உருவாக்க முடியும். ஒரு கட்டிடத்தின் ஸ்திரத்தன்மை அதன் அடித்தளத்தை பொறுத்தே அமைந்திருக்கும். அதுபோல மாணவர்களுடைய வெற்றியும் அவர்களுடைய ஆழமான அறிவுத்தன்மையை பொறுத்துத்தான் அமையும்.

சமுதாயத்தில் பல தீய சக்திகள் இந்திய நாட்டின் ஒருமைப்பாட்டிற்கும், இறையாண்மைக்கும் குந்தகம் விளைவிக்கின்ற வகையிலே செயல்பட்டு வருகின்றன. இவைகளை எதிர்த்து தொய்வடையாமல் போராட வேண்டிய கட்டாயம் இன்றைய இளைஞர்களுக்கு இருக்கிறது. எனவே மாணவர்கள் இத்தகைய தீய சக்திகளை முறியடிக்க தயாராக இருக்கவேண்டும். எந்த சூழ்நிலையிலும் மனிதத்தன்மையோடு செயல்பட்டு சமுதாயத்தின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கவேண்டும்.

இவ்வாறு கல்வித்துறை செயலாளர் அன்பரசு பேசினார்.

Next Story