கிணற்றில் பிணமாக மீட்கப்பட்ட மாணவியின் உடலை நடுரோட்டில் வைத்து உறவினர்கள் சாலை மறியல்


கிணற்றில் பிணமாக மீட்கப்பட்ட மாணவியின் உடலை நடுரோட்டில் வைத்து உறவினர்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 14 April 2018 4:45 AM IST (Updated: 14 April 2018 2:25 AM IST)
t-max-icont-min-icon

திருப்பத்தூர் அருகே கிணற்றில் பிணமாக மீட்கப்பட்ட மாணவியின் சாவுக்கு காரணமானவர்களை கைது செய்யக்கோரி அவரது உடலுடன் உறவினர்கள் மறியலில் ஈடுபட்டனர்.

திருப்பத்தூர்,

திருப்பத்தூர் அருகே உள்ள ஆதியூர் வேடியப்பன்நகர் பகுதியை சேர்ந்தவர் குமார். கட்டிட தொழிலாளி. இவரது மனைவி வள்ளியம்மாள். இவர்களது மகள் லாவண்யா என்கிற லட்சுமி (வயது 15), அதே பகுதியில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் எஸ்.எஸ்.எல்.சி. படித்து வந்தார். கடந்த 9-ந் தேதி மதியம் வீட்டை விட்டு வெளியே சென்ற மாணவி லாவண்யா அதன் பிறகு வீடு திரும்பவில்லை. உறவினர்கள், நண்பர்கள் வீடு என பல இடங்களில் தேடியும் லாவண்யா கிடைக்கவில்லை. இந்த நிலையில் நேற்று முன் தினம் அதே பகுதியில் உள்ள பஞ்சாயத்து கிணற்றில் பிணமாக கிடந்தார்.

இதனையடுத்து அவரது சாவுக்கு காரணமானவர்களை கைது செய்யக்கோரி லாவண்யாவின் பெற்றோர், உறவினர்கள் நேற்று முன் தினம் திருப்பத்தூர் - தர்மபுரி மெயின்ரோட்டில் அவுசிங்போர்டு பகுதி -2 என்ற இடத்தில் சாலைமறியலில் ஈடுபட்டனர். அப்போது லாவண்யாவின் சாவுக்கு அதே பகுதியை சேர்ந்த அருண், ராஜா, அஜித் ஆகிய 3 பேரும் தான் காரணம் அவர்கள் தான் லாவண்யாவை கடத்தி கொலை செய்து, கிணற்றில் வீசி இருக்கிறார்கள், அவர்களை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தினர்.

பின்னர் அவர்களை போலீசார் சமாதானம் செய்து, பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த நிலையில் நேற்று பிரேத பரிசோதனை முடிந்ததும் லாவண்யாவின் உடலை அமரர் ஊர்தி வாகனத்தில் எடுத்து வந்தனர். அப்போது லாவண்யாவின் பெற்றோர், உறவினர்கள் 100-க்கும் மேற்பட்டோர் திருப்பத்தூர் தாலுகா அலுவலகம் எதிரில் திருப்பத்தூர் - கிருஷ்ணகிரி மெயின்ரோடில் லாவண்யாவின் உடலை நடுரோட்டில் வைத்து சாலைமறியலில் ஈடுபட்டனர்.

அப்போது அவர்கள் “குற்றவாளிகள் அருண், ராஜா, அஜித் ஆகிய 3 பேர் மீது இதுவரை போலீசார் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை, அவர்களை கைது செய்யவில்லை” என குற்றம் சாட்டினர்.

மேலும் லாவண்யாவின் தந்தை குமார் அமரர் ஊர்தி வாகனம் முன்பு படுத்து வாகனத்தை எடுக்கவிடாமல் போராட்டத்தில் ஈடுபட்டார். பின்னர் அவரை போலீசார் சமாதானம் செய்து, உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். அதன்பேரில் அவர்கள் லாவண்யாவின் உடலை இறுதிச்சடங்குக்காக எடுத்துச்சென்றனர். இதனால் அப்பகுதியில் சுமார் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Next Story