மங்கலம் அருகே முறைகேடாக இயங்கிய சலவை ஆலையின் மின் இணைப்பு துண்டிப்பு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் நடவடிக்கை


மங்கலம் அருகே முறைகேடாக இயங்கிய சலவை ஆலையின் மின் இணைப்பு துண்டிப்பு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் நடவடிக்கை
x
தினத்தந்தி 14 April 2018 3:30 AM IST (Updated: 14 April 2018 2:39 AM IST)
t-max-icont-min-icon

மங்கலம் அருகே முறைகேடாக இயங்கிய சலவை ஆலையின் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் இந்த நடவடிக்கையை மேற்கொண்டனர்.

திருப்பூர்,

திருப்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஏராளமான பின்னலாடை நிறுவனங்கள் மற்றும் அதனை சார்ந்த நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இதுபோல் சாய, சலவை ஆலைகள், பிரிண்டிங் நிறுவனங்களும் அதிகமாக செயல்பட்டு வருகின்றன. இந்த சாய, சலவை ஆலைகள், பிரிண்டிங் நிறுவனங்கள் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளிடம் அனுமதி பெற்றுக்கொண்டு தான் இயங்க வேண்டும்.

ஆனால் முறைகேடாகவும், அனுமதியின்றியும் இயங்கி வரும் சாய, சலவை ஆலைகள், பிரிண்டிங் நிறுவனங்கள் நீர்நிலைகளிலும், விவசாய நிலங்களிலும் சாய, சலவை, பிரிண்டிங் கழிவுகளை திறந்து விட்டு விடுகின்றன. இதனால் விவசாய நிலங்களும், நீர்நிலைகளும் பாதிக்கப்படுகிறது. எனவே மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் இதனை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் மங்கலம் அருகே உள்ள வேட்டுவபாளையத்தில் உள்ள ஒரு சலவை நிறுவனம் மழைக்காலங்களில் சலவை கழிவுகளை முறைகேடாக வெளியேற்றி வந்துள்ளது. இது குறித்து அந்த பகுதியை சேர்ந்த விவசாயிகள் மாவட்ட கலெக்டர் கே.எஸ்.பழனிசாமியிடம் புகார் தெரிவித்தனர். அவர் இது குறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருந்தார்.

அதன் பேரில் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் அந்த பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அந்த சலவை நிறுவனம் முறைகேட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. தொடர்ந்து இது குறித்து சென்னையில் உள்ள மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதிகாரிகளின் உத்தரவின் பேரில் அந்த சலவை ஆலையின் மின் இணைப்பை நேற்று மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் துண்டித்தனர்.

Next Story