மாநிலத்தில் ஆட்சி நிர்வாகத்தை நடத்த கர்நாடக மக்கள் எங்கள் கட்சிக்கு ஒரு வாய்ப்பு வழங்க வேண்டும் குமாரசாமி பேச்சு
மாநிலத்தில் ஆட்சி நிர்வாகத்தை நடத்த கர்நாடக மக்கள் எங்கள் கட்சிக்கும் ஒரு வாய்ப்பு வழங்க வேண்டும் என்று குமாரசாமி கூறினார்.
பெங்களூரு,
மாநிலத்தில் ஆட்சி நிர்வாகத்தை நடத்த கர்நாடக மக்கள் எங்கள் கட்சிக்கும் ஒரு வாய்ப்பு வழங்க வேண்டும் என்று குமாரசாமி கூறினார்.
ரூ.25 ஆயிரம் கோடி நிதி
கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி நெசவாளர்கள், பட்டு விவசாயிகள், முட்டை உற்பத்தியாளர்கள், பட்டு நூல் உற்பத்தியாளர்களுடன் ஜனதா தளம்(எஸ்) கட்சியின் மாநில தலைவர் குமாரசாமி பெங்களூருவில் நேற்று கலந்துரையாடல் நடத்தினார். இதில் குமாரசாமி பேசியதாவது:-
கர்நாடகத்தில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் விவசாய கடன் தள்ளுபடி செய்யப்படும். விவசாயிகள் மீண்டும் கடனில் சிக்குவதை தடுக்க ரூ.25 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்படும். பட்டு விவசாயிகளின் அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும். புதிய விவசாய கொள்கை வகுக்கப்படும். கோலார் முதல் சாம்ராஜ்நகர் மாவட்டம் வரை பட்டுநூல் தொழிற்சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
பொருளாதார முன்னேற்றம்
இதன் மூலம் பட்டு வளர்ப்பு தொழில் வளர்ச்சி அடையும். பொருளாதார முன்னேற்றமும் ஏற்படும். தேசிய கட்சிகளான பா.ஜனதா மற்றும் காங்கிரஸ் வீட்டு வாசலுக்கு நாங்கள் செல்ல மாட்டோம். நாங்கள் மக்களின் வீட்டு வாசலுக்கு செல்கிறோம். மக்களிடம் இருந்து நேரடியாக ஆலோசனைகளை பெற்று அவற்றை நிறைவேற்ற நடவடிக்கை எடுப்போம்.
நான் முதல்-மந்திரியானால் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளின் ஆலோசனைகளுக்கு பதிலாக உங்களை போன்ற பொதுமக்களின் ஆலோசனைகளை பெற்று ஆட்சி நிர்வாகத்தை நடத்துவேன். பட்டு வளர்ப்பு தொழில் செய்யும் விவசாயிகள் ரூ.1,750 கோடியில் சிறப்பு திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று கேட்டுள்ளனர். தாய்லாந்து நாட்டில் பட்டுவில் இருந்து 30 வகையான பொருட்களை தயாரிக்கிறார்கள்.
நெசவாளர்கள் குடும்பத்திற்கு...
அதே போல் கர்நாடகத்திலும் அத்தகைய பொருட்களை தயாரிக்க ஒரு பட்டு தொழில் பல்கலைக்கழகம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். தாலுகா மற்றும் ஒன்றியங்களில் தலா ஒரு தொழில் நிறுவனம் தொடங்கப்படும். சூரியசக்தி மின் உற்பத்தி சாதனங்கள் தற்போது சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. அந்த சாதனங்கள் கர்நாடகத்திலேயே உற்பத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
விவசாயிகளுக்கு வழங்குவது போல் நெசவாளர்களின் குடும்பங்களுக்கு உதவி செய்யப்படும். நெசவாளர்கள் தற்கொலையை தடுக்கவும், நெசவாளர் சமுதாயத்தை பாதுகாக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்படும். கர்நாடகத்தில் அடுத்த மாதம்(மே) 18-ந் தேதி ஜனதா தளம்(எஸ்) அரசு அமையும். நாங்கள் கனவு உலகத்தில் இல்லை.
கூட்டணி வைக்கமாட்டோம்
நாங்கள் மக்கள் உலகத்தில் இருக்கிறோம். யாருடனும் நாங்கள் கூட்டணி வைக்க மாட்டோம். ஆட்சி நிர்வாகத்தை நடத்த கர்நாடக மக்கள் எங்கள் கட்சிக்கும் ஒரு முறை வாய்ப்பு வழங்க வேண்டும். கூட்டணி அமைக்க வேண்டிய நிலை வந்தால் நாங்கள் அதுபற்றி ஆலோசிக்க மாட்டோம். நாங்கள் ஆட்சிக்கு வந்த பிறகு வேலை வாய்ப்புகளை அதிகமாக உருவாக்குவோம்.
கோலார், சிக்பள்ளாப்பூர் மாவட்டங்களுக்கு நிரந்தரமாக பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். என்னை நம்புங்கள், வீதியில் நின்று குடிநீருக்காக போராட வேண்டிய நிலையை ஏற்படுத்த மாட்டேன்.
இவ்வாறு குமாரசாமி பேசினார்.
Related Tags :
Next Story