ஊரக வளர்ச்சித்துறை சார்பில் கிராம சுயாட்சி பிரசார திட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் இன்று தொடங்குகிறது
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள் துறையின் சார்பில், கிராம சுயாட்சி பிரசார திட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் இன்று (சனிக்கிழமை) தொடங்கி அடுத்த மாதம் 5-ந்தேதி வரை நடக்க உள்ளது என்று கலெக்டர் பல்லவி பல்தேவ் தெரிவித்தார்.
தேனி,
தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள் துறையின் சார்பில், கிராம சுயாட்சி பிரசார திட்டம் குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு கலெக்டர் பல்லவி பல்தேவ் தலைமை தாங்கி பேசினார். அவர் பேசும் போது கூறியதாவது:-
கிராம சுயாட்சி பிரசார திட்டத்தின் கீழ் இன்று (சனிக் கிழமை) முதல் அடுத்த மாதம் 5-ந்தேதி வரை சமூக முன்னேற்றம், கிராமப்புற ஏழை மக்கள் முன்னேற்றம் அடையும் வகையில் செயல்படுத்தப்பட உள்ள புதிய திட்டங்கள் குறித்து பொதுமக்களிடம் விளக்கம் அளிக்கவும், விவசாயிகளின் வருமானத்தை இருமடங்காக உயர்த்தும் வகையிலும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன.
இந்த நிகழ்ச்சிகள் நடத்த ஒன்றியம் வாரியாக இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. பெரியகுளம் ஒன்றியத்தில் எண்டப்புளி ஊராட்சிக்கு உட்பட்ட இ.புதுக்கோட்டை, தேனி ஒன்றியத்தில் கோட்டூர், சீலையம்பட்டி, சின்னமனூர் ஒன்றியத்தில் அழகாபுரி, ஆண்டிப்பட்டி ஒன்றியத்தில் குன்னூர், தேக்கம்பட்டி ஆகிய 6 கிராமங்களில் நடக்கிறது.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, சமூக நலத்துறையின் சார்பில் இன்று சமூக நீதிநாள் விழா கொண்டாடப்படுகிறது. அதில், அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன. 18-ந்தேதி ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறையின் சார்பில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் கிராம ஊராட்சிகளில் ஒட்டுமொத்த சுகாதாரப் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.
அத்துடன், சுகாதார விழிப்புணர்வு ஊர்வலம் நடத்தப்பட உள்ளது. 20-ந்தேதி தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை, உணவு பாதுகாப்புத்துறை, நுகர்வோர் பாதுகாப்புத்துறை சார்பில் தீயணைப்பு கருவிகளை பாதுகாப்பான முறையில் கையாள்வது குறித்தும், தீத்தடுப்பு பணிகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட உள்ளது.
24-ந்தேதி கிராம ஊராட்சிகளில் சிறப்பு கிராமசபை கூட்டம் நடத்தி அதில் நோய் தடுப்பு மற்றும் சுகாதாரம், பெண்களுக்கு அதிகாரம் அளித்தல், சமூக வளர்ச்சி குறித்து மாணவ-மாணவிகளுக்கு கட்டுரைப்போட்டி, ஓவியப்போட்டி நடத்தப்பட உள்ளது. 28-ந்தேதி அரசு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்திய கிராம ஊராட்சிகளை தேர்வு செய்து பரிசுகள் வழங்கப்படுகிறது. விழாவில் அரசு நலத்திட்ட உதவிகள் பெற்றவர்கள் தங்களின் அனுபவங்களை பகிர்ந்து கொள்ள ஏற்பாடு செய்யப்படும்.
30-ந்தேதி மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறையின் சார்பில் மருத்துவ காப்பீடு திட்டம் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். 2-ந்தேதி வேளாண்மைத்துறையின் சார்பில் விவசாய திட்டங்கள் குறித்து விளக்க கூட்டம் நடத்தப்படுகிறது. 5-ந்தேதி மகளிர் திட்டம் சார்பில் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், மகளிர் சுயஉதவிக்குழுக்கள் ஆகியோரிடம் கிராம சுயாட்சி பிரசார திட்டம் குறித்து விளக்கம் அளிக்கப்படும். இந்த நிகழ்ச்சிகள் தொடர்பாக அந்தந்த துறைகள் சார்பில் புகைப்படத்துடன் கூடிய அறிக்கையை மாவட்ட நிர்வாகத்திடம் சமர்ப்பிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் திலகவதி, வேளாண்மைத்துறை இணை இயக்குனர் முகமது அப்துல்நசீர், தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் கிஷோர்குமார், மாவட்ட மகளிர் திட்ட அலுவலர் கல்யாணசுந்தரம், ஊராட்சிகள் உதவி இயக்குனர் அபிதாஹனீப் மற்றும் அரசின் பல்வேறு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story