பன்வெல் கமிஷனருக்கு எதிராக மாநகராட்சி நிறைவேற்றிய தீர்மானத்துக்கு தடை மாநில அரசு உத்தரவு


பன்வெல் கமிஷனருக்கு எதிராக மாநகராட்சி நிறைவேற்றிய தீர்மானத்துக்கு தடை மாநில அரசு உத்தரவு
x
தினத்தந்தி 14 April 2018 4:15 AM IST (Updated: 14 April 2018 3:47 AM IST)
t-max-icont-min-icon

பன்வெல் கமிஷனர் சுதாகர் ஷிண்டேக்கு எதிராக மாநகராட்சி நிறைவேற்றிய நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு மாநில அரசு தற்காலிக தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

மும்பை,

பன்வெல் கமிஷனர் சுதாகர் ஷிண்டேக்கு எதிராக மாநகராட்சி நிறைவேற்றிய நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு மாநில அரசு தற்காலிக தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

நம்பிக்கையில்லா தீர்மானம்

பன்வெல் மாநகராட்சி கமிஷனராக இருப்பவர் சுதாகர் ஷிண்டே. சட்டவிரோத ஆக்கிரமிப்புகளை அகற்றியது, நடைபாதை வியாபாரிகளை அப்புறப்படுத்தியது உள்ளிட்ட பல அதிரடி நடவடிக்கையால் பொது மக்களிடையே நற்பெயரை பெற்றவர். ஆனால் இவருக்கும், பன்வெல் மாநகராட்சியை ஆளும் பா.ஜனதா கவுன்சிலர்களுக்கும் இடையே ஒத்து போகவில்லை. எனவே இவரை இடமாற்றம் செய்ய வேண்டும் என பன்வெல் உள்ளூர் பா.ஜனதா தலைவர்கள், மாநகராட்சி மேயர் கவிதா சவுட்மால் ஆகியோர் முதல் - மந்திரி தேவேந்திர பட்னாவிசுக்கு அழுத்தம் கொடுத்து வந்தனர்.

இந்தநிலையில் கடந்த மாதம் 26-ந் தேதி பன்வெல் மாநகராட்சியில் கமிஷனர் சுதாகர் ஷிண்டேக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டது. மாநகராட்சியை ஆளும் பா.ஜனதா கவுன்சிலர்கள் கமிஷனருக்கு எதிராக வாக்களித்து இருந்தனர்.

மாநில அரசு தடை

எனினும் மாநகராட்சி கமிஷனருக்கு ஆதரவாக பொதுமக்கள் களத்தில் இறங்கினர். அவர்கள் கமிஷனருக்கு ஆதரவாக கையெழுத்து இயக்கங்களை நடத்தினர். தனக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து கமிஷனரும் மாநில அரசிடம் விளக்கம் அளித்து இருந்தார்.

இந்தநிலையில் பன்வெல் கமிஷனருக்கு எதிராக மாநகராட்சி கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு மாநில அரசு தற்காலிக தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. மாநில நகர்புற வளர்ச்சி துறை இந்த உத்தரவை பிறப்பித்து உள்ளது. இதுகுறித்து மாநில அரசு வெளியிட்டுள்ள தகவலில் மக்கள் நலனை கருத்தில் கொண்டு கமிஷனருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு ஒப்புதல் அளிக்கவில்லை எனவும், மேலும் கமிஷனர் தனது பணியை சிறப்பாக செய்து, ஊழலுக்கு எதிராக செயல்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.

மாநில அரசின் இந்த உத்தரவு உள்ளூர் பா.ஜனதா தலைவர்களுக்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.

Next Story