படகு வடிவிலான முதுமக்கள் தாழி கண்டெடுப்பு: பல்லாவரத்தில் நீதிபதி என்.கிருபாகரன் 21-ந்தேதி நேரில் ஆய்வு


படகு வடிவிலான முதுமக்கள் தாழி கண்டெடுப்பு: பல்லாவரத்தில் நீதிபதி என்.கிருபாகரன் 21-ந்தேதி நேரில் ஆய்வு
x
தினத்தந்தி 14 April 2018 4:15 AM IST (Updated: 14 April 2018 4:15 AM IST)
t-max-icont-min-icon

பல்லாவரத்தில் படகு வடிவிலான முதுமக்கள் தாழி கண்டுஎடுக்கப்பட்டுள்ளதால், அப்பகுதியை வருகிற 21-ந்தேதி ஆய்வு செய்ய போவதாக ஐகோர்ட்டு நீதிபதி என்.கிருபாகரன் அறிவித்துள்ளார்.

சென்னை, 

சென்னை பல்லாவரம், ஜமீன்பல்லாவரம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் கற்கால மனிதர்கள் வாழ்ந்ததற்காக பல ஆதாரங்கள் புதைந்து கிடக்கிறது. இதனால், அந்த பகுதிகளில் வீடுகளை கட்டுவதற்கு மத்திய தொல்லியல்துறை கட்டுப்பாடுகள் விதித்துள்ளன. சில பகுதிகளை தொல்லியல் துறை தன் கட்டுப்பாட்டின் கீழும் வைத்துள்ளன.

இந்தநிலையில், பத்திரிகையாளர் ஆர்.எம்.பாவேந்தன் என்பவர் ஐகோர்ட்டில் ஒரு வழக்கு தொடர்ந்தார். அதில், ‘பல்லாவரத்தில் உள்ள 11 முதல் 17 வரையிலான வார்டுகளில் புதிய கட்டிடங்களை கட்டுவதற்கு நகராட்சி நிர்வாகம் அனுமதி வழங்குவது இல்லை’ என்று கூறியிருந்தார்.

ஆய்வு நடத்த வேண்டும்

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி என்.கிருபாகரன், ‘பல்லாவரம், ஜமீன் பல்லாவரம் ஆகிய ஊர்களில் உள்ள சில பகுதிகளை, புராதன நினைவுச் சின்னங்கள் மற்றும் தொல்பொருள் தளங்கள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கொண்டு வந்து, தொல்லியல் துறை அறிவிக்கை வெளியிட்டுள்ளது. பழமையான நினைவுச் சின்னங்களை அதன் வரலாறு மறையாமல் பாதுகாக்க வேண்டியது மிகவும் அவசியம் ஆகும்.

எனவே, எந்த பகுதி தொல்லியல் துறை கட்டுப்பாட்டின் கீழ் வரவேண்டும் என்பது தொடர்பாக தொல்லியல் துறை, வருவாய்த்துறை அதிகாரிகள் இணைந்து ஆய்வு நடத்த வேண்டும். இதற்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கவேண்டும்’ என்று கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் உத்தரவிட்டு இருந்தார்.

நேரில் ஆய்வு

இதன்படி, ஆய்வுகள் நடந்தப்பட்டது. அப்போது, கற்கால மனிதர்கள் பயன்படுத்திய ஆயுதங்கள் கண்டு எடுக்கப்பட்டன. பல்லாவரம் பகுதியில் 12 கால்கள் கொண்ட படகு வடிவிலான முதுமக்கள் தாழி கண்டு எடுக்கப்பட்டுள்ளது. இது கி.மு. 300 ஆண்டுகளுக்கு முந்தைய நினைவு சின்னம் என்று தொல்லியல் துறை அறிவித்துள்ளது.

இந்தநிலையில், இந்த வழக்கு நீதிபதி என்.கிருபாகரன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, உதவி சொலிசிட்டர் ஜெனரல் சு.சீனிவாசன் ஆஜராகி, பழமை வாய்ந்த பொருட்கள் கண்டு எடுக்கப்பட்டது குறித்து கூறினார். இதையடுத்து, பல்லாவரம், ஜமீன் பல்லாவரம் உள்ளிட்ட பகுதிகளை வருகிற 21-ந்தேதி தானே நேரில் சென்று ஆய்வு செய்யப்போவதாக நீதிபதி என்.கிருபாகரன் அறிவித்தார். 

Next Story