இரணியல் அருகே பெண் போலீசின் கணவர் தண்டவாளத்தில் பிணமாக கிடந்தார்


இரணியல் அருகே பெண் போலீசின் கணவர் தண்டவாளத்தில் பிணமாக கிடந்தார்
x
தினத்தந்தி 14 April 2018 4:22 AM IST (Updated: 14 April 2018 4:22 AM IST)
t-max-icont-min-icon

இரணியல் அருகே ரெயில் தண்டவாளத்தில் பெண் போலீஸ் ஏட்டுவின் கணவர் பிணமாக கிடந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

நாகர்கோவில்,

குமரி மாவட்டம் மேக்காமண்டபத்தை அடுத்த விலவூர் கடமலைக்குன்று பகுதியைச் சேர்ந்தவர் சார்லஸ் கிருபைகுமார் (வயது 42). இவருடைய மனைவி மேரி மெர்ஜின் (39). சென்னையில் உள்ள போலீஸ் டி.ஜி.பி. அலுவலகத்தில் போலீஸ் ஏட்டாக பணிபுரிந்த இவர், கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னை கியூ பிராஞ்ச் போலீசுக்கு மாற்றப்பட்டார். அங்கிருந்து கடந்த ஒரு வாரத்துக்கு முன் நாகர்கோவிலுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இவர்களுக்கு 4½ வயதில் ஒரு மகனும், 2 வயதில் ஒரு மகனும் உள்ளனர்.

சார்லஸ் கிருபைகுமார் சென்னையில் தனது மனைவியுடன் வசித்து வந்தார். அவர் நடத்தி வந்த தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் மனம் உடைந்த நிலையில் காணப்பட்டார். இதற்கிடையில்தான் மனைவி மேரி மெர்ஜினை நாகர்கோவிலுக்கு பணிமாறுதல் பெறக்கூறியுள்ளார். அதன்படி அவரும் பணிமாறுதல் பெற்றார். தற்போது அவர் மருத்துவ விடுப்பு எடுத்து கணவர் மற்றும் குழந்தைகளுடன் சொந்த ஊருக்கு வந்திருந்தார்.

இந்தநிலையில் மருத்துவ விடுப்பு முடிவடையும் நிலையில் மீண்டும் சென்னை கியூ பிராஞ்ச் போலீஸ் பிரிவு பணியில் சேர்ந்துவிட்டு, அங்கிருந்து பணிமாறுதல் உத்தரவு பெற்று நாகர்கோவில் திரும்ப மேரி மெர்ஜின் திட்டமிட்டிருந்தார். அதன்படி அவர் நேற்று சென்னைக்கு புறப்பட தயாராகிக்கொண்டிருந்தார். இதற்கிடையே வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த சார்லஸ் கிருபைகுமாரை நேற்று அதிகாலையில் திடீரென காணவில்லை. வீட்டில் நின்ற காரையும் எடுத்துச் சென்றிருந்தார். வெளியே எங்கேயாவது சென்றுவிட்டு வீட்டுக்கு திரும்புவார் என்ற நம்பிக்கையில் மேரி மெர்ஜின் இருந்தார்.

இந்தநிலையில் நேற்று காலையில் இரணியல் ரெயில் நிலையத்துக்கு அருகில் ஒரு ஆண் பிணம் கிடப்பதாக நாகர்கோவில் ரெயில்வே போலீசாருக்கு தகவல் வந்தது. அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ராஜபூபதி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். அப்போது அங்கு ரெயில் மோதியதில் 2 கால்கள் சிதைந்த நிலையிலும், வாயில் பலத்த காயங்களுடனும் சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஒரு ஆண் பிணமாக கிடந்தார். அவர் உடலைக் கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தியதில் அவர் விலவூர் கடமலைக்குன்று பகுதியைச் சேர்ந்த சார்லஸ் கிருபைகுமார் என்பது தெரிய வந்தது. அவர் ஓட்டி வந்த கார் இரணியல் ரெயில் நிலையம் அருகில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது.

எனவே சார்லஸ் கிருபைகுமார் காரை நிறுத்திவிட்டு அப்பகுதியில் உள்ள ரெயில் தண்டவாளத்தை கடக்க முயன்றபோது அவ்வழியாக வந்த ஏதோ ஒரு ரெயில் மோதி இறந்திருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர். பின்னர் போலீசார் அவருடைய உடலை பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுதொடர்பாக அவருடைய மனைவி மேரி மெர்ஜின் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சார்லஸ் கிருபைகுமார் ரெயில் மோதி இறந்தாரா? அல்லது ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டாரா? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story