விக்கிரமசிங்கபுரத்தில் பாபநாச சுவாமி கோவில் சித்திரைவிசு திருவிழா தேரோட்டம் திரளான பக்தர்கள் பங்கேற்பு


விக்கிரமசிங்கபுரத்தில் பாபநாச சுவாமி கோவில் சித்திரைவிசு திருவிழா தேரோட்டம்  திரளான பக்தர்கள் பங்கேற்பு
x
தினத்தந்தி 14 April 2018 4:24 AM IST (Updated: 14 April 2018 4:24 AM IST)
t-max-icont-min-icon

பாபநாசம் பாபநாச சுவாமி கோவில் சித்திரை விசு திருவிழா தேரோட்டம் நேற்று நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

விக்கிரமசிங்கபுரம், 

பாபநாசம் பாபநாச சுவாமி கோவில் சித்திரை விசு திருவிழா தேரோட்டம் நேற்று நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

தேரோட்டம் 

பாபநாசம் உலகாம்பிகை சமேத பாபநாச சுவாமி கோவிலில் சித்திரை விசு திருவிழா கடந்த 5–ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் குறிப்பிட்ட சமுதாயத்தினரால் விழா நடத்தப்பட்டு வருகிறது. 9–ம் திருநாளான நேற்று காலையில் தேரோட்டம் நடந்தது.

முன்னதாக சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனைகள் நடந்தது. பின்னர் காலை 8.30 மணி அளவில் சுவாமி, அம்பாள் தேருக்கு எழுந்தருளினர். 10 மணிக்கு தேரோட்டம் தொடங்கியது. முருகையா பாண்டியன் எம்.எல்.ஏ. வடம் பிடித்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தார். தொடர்ந்து முன்னாள் எம்.எல்.ஏ. சக்திவேல் முருகன், கோவில் நிர்வாக அதிகாரி (பொறுப்பு) வெங்கடேசுவரன் மற்றும் அம்பை, விக்கிரமசிங்கபுரம் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்துச் சென்றனர். தேர் நான்கு ரதவீதிகளின் வழியாக சென்று மீண்டும் நிலையை அடைந்தது. தேருக்கு வழிநெடுகிலும் பக்தர்கள் வரவேற்பு கொடுத்தனர். பின்னர் இரவில் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் சுவாமி–அம்பாள் வீதிஉலா நடந்தது.

இன்று 

சித்திரைவிசு திருநாளான இன்று (சனிக்கிழமை) நள்ளிரவு ஒரு மணிக்கு சுவாமி– அம்பாள் ரி‌ஷப வாகனத்தில் எழுந்தருளி திருமண கோலத்தில் பாபநாசத்தில் அகஸ்தியருக்கு காட்சி கொடுக்கும் வைபவம் நடக்கிறது.

நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 8 மணிக்கு சுவாமி, அம்பாள் மரபு மண்டபத்துக்கு அழைத்து வருதல், மதியம் 12 மணிக்கு குடமுழுக்கு, அலங்கார வழிபாடு, ஒரு மணிக்கு அன்னம் பாலிப்பு, இரவு 8 மணிக்கு சுவாமி, அம்பாள் வீதிஉலா ஆகியவை நடக்கிறது.

Next Story