தமிழக விவசாய சங்கங்களின் சார்பில் சவப்பெட்டி முன் ஒப்பாரி வைத்து நூதன போராட்டம்


தமிழக விவசாய சங்கங்களின் சார்பில் சவப்பெட்டி முன் ஒப்பாரி வைத்து நூதன போராட்டம்
x
தினத்தந்தி 14 April 2018 4:26 AM IST (Updated: 14 April 2018 4:26 AM IST)
t-max-icont-min-icon

தமிழக விவசாய சங்கங்களின் சார்பில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி சவப்பெட்டி முன் ஒப்பாரி வைத்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னை,

தமிழக விவசாய சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்க வலியுறுத்தியும், விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரியும் சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே நேற்று உண்ணாவிரத போராட்டம் நடந்தது.

இந்த போராட்டத்துக்கு தமிழக விவசாய சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு ஒருங்கிணைப்பாளர் குருசாமி தலைமை தாங்கினார். இதற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி மூத்த துணைத்தலைவர் பி.எஸ்.ஞானதேசிகன், மாவட்ட தலைவர் கொட்டிவாக்கம் முருகன் ஆகியோர் நேரில் வந்தனர்.

நூதன போராட்டம்

போராட்டத்தின் போது விவசாயி ஒருவர் சவப்பெட்டியில் படுத்தபடியும், அவரை சுற்றி பெண்கள் ஒப்பாரி வைத்தும் போராடினார்கள். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீசார் இவ்வாறு போராட்டம் நடத்த அனுமதி இல்லை என்று கூறி சவப்பெட்டியை எடுக்க வந்தனர்.

அப்போது விவசாயிகளுக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அதன்பின்னர், அந்த நூதன போராட்டத்தை கைவிட்டு எப்போதும் போல போராட்டம் நடத்தினார்கள். இதுகுறித்து ஒருங்கிணைப்பாளர் த.குருசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

சவப்பெட்டி

காவிரி உரிமை பிரச்சினையில் தமிழக விவசாயிகள் அனைவரும் ஒருமித்த குரலில் மத்திய அரசுக்கு இந்த கோரிக்கையை கொண்டு செல்ல வேண்டும் என்ற நோக்கில் இந்த போராட்டம் நடைபெற்று வருகிறது. 465 பக்கங்களை உள்ளடக்கிய காவிரி தீர்ப்பு என்பது பெரிய வரலாற்று தீர்வு.

அதில் கொடுக்கப்பட்ட தீர்ப்பின் அடிப்படையில் உரிய பங்கு அளிக்கவில்லை என்றாலும், இருக்கின்ற பங்கை முறையாக பகிர்ந்து அளிக்கவும், அதை மேற்பார்வை செய்யவும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க ஏற்க மறுக்கும் மத்திய அரசையும், எதிர்க்கும் கர்நாடக அரசையும் சவப்பெட்டிக்கு சமமாக மதித்து நாங்கள் போராட்டம் நடத்துகிறோம்.

அடுத்தகட்ட போராட்டம்?

மத்திய அரசு உடனடியாக காவிரி மேலாண்மை வாரியத்தையும், ஒழுங்காற்று குழுவையும் அமைத்து பாராளுமன்றத்தில் ஏற்புக்கு வைக்க வேண்டும். சுப்ரீம் கோர்ட்டு வருகிற மே மாதம் 3-ந்தேதியன்று மத்திய அரசின் வரைவை ஏற்று இறுதி தீர்ப்பு வழங்கி காவிரி மேலாண்மை வாரியத்துக்கு உத்தரவாதம் அளிக்க வேண்டும்.

3-ந்தேதி சுப்ரீம் கோர்ட்டு முடிவு செய்யவில்லை என்றால், அதன்பிறகு கோடை விடுமுறையில் 6 வாரங்கள் தள்ளிபோய்விடும். இது மத்திய அரசாங்கத்தின் காலம் தாழ்த்தும் நடவடிக்கைக்கு நீதிமன்றம் ஒத்துப்போகும் செயலாக இருக்கும். 3-ந்தேதி இறுதி தீர்ப்பு அளிக்காத பட்சத்தில் அடுத்தக்கட்டமாக எந்த மாதிரியான போராட்டம் நடத்தலாம் என்பதை கூட்டு நடவடிக்கைக்குழு முடிவு செய்யும்.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story