அடையாள அட்டை இல்லாமல் மீன்பிடிக்க செல்லக்கூடாது: நாட்டு படகு மீனவர்களுக்கு அதிகாரிகள் எச்சரிக்கை


அடையாள அட்டை இல்லாமல் மீன்பிடிக்க செல்லக்கூடாது: நாட்டு படகு மீனவர்களுக்கு அதிகாரிகள் எச்சரிக்கை
x
தினத்தந்தி 15 April 2018 3:30 AM IST (Updated: 15 April 2018 12:40 AM IST)
t-max-icont-min-icon

அடையாள அட்டை இல்லாமல் மீன்பிடிக்க செல்லக்கூடாது என்று மீன்துறை அதிகாரிகள் நாட்டுபடகு மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

ராமேசுவரம்,

தமிழகத்தில் நேற்று முதல் 61 நாட்கள் மீன்பிடி தடைகாலம் தொடங்கியுள்ளது. இதையடுத்து விசைப்படகுகள் மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டு கடலுக்கு செல்ல அனுமதிக்கப்படவில்லை. இந்த நிலையில் நேற்று இந்திய கடற்படையினர் ஓலைக்குடா கடல் பகுதியில் ரோந்து சென்ற போது 3 நாட்டுப்படகுகளில் மீனவர்கள் மீன் பிடித்து கொண்டிருந்தனர்.

இதைக்கண்ட கடற்படையினர் அந்த படகுகளை மடக்கி பிடித்து சோதனையிட்டபோது அதில் 32 மீனவர்கள் இருந்தனர். அவர்கள் கனவாய் மீன் பிடிக்கும் வலை வைத்து மீன்பிடித்துக்கொண்டிருந்தனர். மீனவர்களுக்கான அடையாள அட்டையை சோதனையிட்டபோது சிலருக்கு அடையாள அட்டைகள் இல்லை.

இதையடுத்து அந்த நாட்டு படகுகளையும், மீனவர்களையும் கடற்படை முகாமுக்கு அழைத்து வந்தனர்.

பின்பு அவர்கள் அனைவரும் மீன்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டனர். அதனை தொடர்ந்து அவர்களிடம் விசாரணை செய்த மீன்துறை அதிகாரிகள் இனிமேல் அடையாள அட்டை இல்லாமல் கடலுக்கு மீன்பிடிக்க செல்லக்கூடாது என்று எச்சரித்து அனுப்பி வைத்தனர். 

Next Story