பிறந்த நாளையொட்டி அம்பேத்கர் சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவிப்பு


பிறந்த நாளையொட்டி அம்பேத்கர் சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவிப்பு
x
தினத்தந்தி 15 April 2018 4:00 AM IST (Updated: 15 April 2018 12:52 AM IST)
t-max-icont-min-icon

அம்பேத்கர் பிறந்தநாளையொட்டி நாகர்கோவிலில் அவருடைய சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் தலைமையில் பா.ஜனதா கட்சியினர் மோட்டார் சைக்கிள்களில் பேரணியாக வந்து மரியாதை செலுத்தினர்.

நாகர்கோவில்,

அம்பேத்கரின் பிறந்தநாள் விழா நாடு முழுவதும் நேற்று கொண்டாடப்பட்டது. குமரி மாவட்டத்திலும் அவருடைய பிறந்தநாள் நிகழ்ச்சிகள் நடந்தன.

நாகர்கோவில் வடசேரி அண்ணா விளையாட்டு அரங்கம் அருகில் உள்ள அம்பேத்கர் முழு உருவச்சிலைக்கு பல்வேறு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். அதன் விவரம் வருமாறு:-

அம்பேத்கர் பிறந்தநாளையொட்டி, குமரி மாவட்ட பா.ஜனதா சார்பில் மோட்டார் சைக்கிள் பேரணி நடந்தது. மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் முகாம் அலுவலகத்தில் இருந்து இந்த பேரணி தொடங்கியது. இதற்கு மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கியதோடு, அவரும் பேரணியில் பங்கேற்று பா.ஜனதா கட்சியினருடன் சேர்ந்து மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்றார்.

இந்த பேரணி பொதுப்பணித்துறை அலுவலக சாலை, வேப்பமூடு சந்திப்பு, அண்ணா பஸ் நிலைய சாலை, மீனாட்சிபுரம், கட்டபொம்மன் சந்திப்பு, ஒழுகினசேரி, வடசேரி வழியாக அண்ணாவிளையாட்டு அரங்கம் அருகில் உள்ள அம்பேத்கர் சிலை முன்பு நிறைவடைந்தது. இதில் பா.ஜனதா மாவட்ட தலைவர் முத்துக்கிருஷ்ணன் உள்ளிட்ட மாநில, மாவட்ட, நகர, ஒன்றிய, பேரூர், ஊராட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் பா.ஜனதா கட்சி கொடிகளை மோட்டார் சைக்கிள்களில் கட்டியபடி பங்கேற்றனர். பின்னர் அம்பேத்கர் சிலைக்கு மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்ச்சியிலும் கட்சி நிர்வாகிகள் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.

குமரி மாவட்ட அ.தி.மு.க. சார்பில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் குமரி மாவட்ட மீனவர் கூட்டுறவு இணைய தலைவர் சகாயம், நிர்வாகிகள் ஜெயசீலன், முன்னாள் கவுன்சிலர் ஜெயராமன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

குமரி மாவட்ட பால்வளத்தலைவர் அசோகன் தலைமையில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

குமரி கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதற்கு தி.மு.க. மாவட்ட செயலாளர் சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். இதில் நகர செயலாளர் வக்கீல் மகேஷ், முன்னாள் எம்.பி.ஹெலன் டேவிட்சன், தில்லைச்செல்வம், ஒன்றிய செயலாளர் மதியழகன், சேக்தாவூது உள்பட பலர் கலந்து கொண்டனர்.

அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் (அ.ம.மு.க.) சார்பில் ஜெயலலிதா பேரவை மாநில இணைச் செயலாளர் என்ஜினீயர் லெட்சுமணன் தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டது. இதில் ஜெங்கின்ஸ், கீதா ஷிவானி, இ.என்.சங்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் வக்கீல் ராதாகிருஷ்ணன் தலைமையில், பிரின்ஸ் எம்.எல்.ஏ. அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் நகரக்குழு செயலாளர் மோகன் தலைமையில், மாவட்டக்குழு உறுப்பினர் அந்தோணி, மீனாட்சி சுந்தரம், அஸிஸ், சோரீஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் குமரி கிழக்கு மாவட்ட செயலாளர் திருமாவேந்தன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் பகலவன் உள்பட பலர் கலந்து கொண்டனர். தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் ராஜேஸ்வர பாண்டியன் தலைமையிலும், ஆதிதிராவிட முன்னேற்ற கழக நிறுவன தலைவர் ஜான் விக்டர்தாஸ் தலைமையிலும், ரெயில்வே எஸ்.சி., எஸ்.டி. தொழிலாளர் கூட்டமைப்பு நிர்வாகி சத்தியராஜ் தலைமையிலும், தலித் உரிமைகள் பாதுகாப்பு இயக்கம், ஆதி தமிழர் பேரவை போன்ற பல்வேறு இயக்கங்கள், கட்சிகள் சார்பிலும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.


Next Story