மக்கள் நலத்திட்டங்களுக்கு முட்டுக்கட்டை போட்டால் கவர்னரை எதிர்ப்போம் - அமைச்சர் நமச்சிவாயம் ஆவேசம்


மக்கள் நலத்திட்டங்களுக்கு முட்டுக்கட்டை போட்டால் கவர்னரை எதிர்ப்போம் - அமைச்சர் நமச்சிவாயம் ஆவேசம்
x
தினத்தந்தி 15 April 2018 4:45 AM IST (Updated: 15 April 2018 1:32 AM IST)
t-max-icont-min-icon

மக்கள் நலத்திட்டங்களை நிறைவேற்ற விடாமல் முட்டுக்கட்டை போட்டால் கவர்னரை எதிர்ப்போம் என்று அமைச்சர் நமச்சிவாயம் கூறினார்.

புதுச்சேரி,

காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகத்தில் அம்பேத்கர் பிறந்த நாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. விழாவிற்கு கட்சியின் மாநில தலைவர் நமச்சிவாயம் தலைமை தாங்கினார். முதல்-அமைச்சர் நாராயணசாமி முன்னிலை வகித்தார்.

விழாவில் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்த அம்பேத்கர் உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. விழாவில் அமைச்சர் நமச்சிவாயம் பேசியதாவது:-

மத்திய பா.ஜ.க. அரசை எதிர்க்கும் மகத்தான சூழல் நாட்டில் உருவாகியுள்ளது. பா.ஜ.க.வின் அராஜக போக்கால் மக்கள் காங்கிரஸ் பக்கம் திரும்பியுள்ளனர். அம்பேத்கர் எழுதிய அரசியலமைப்பு சட்டத்தில் திருத்தம் கொண்டு வருவோம் எனக்கூறி, இந்தியாவை காவி மயமாக்குவது ஒன்றேயே லட்சியமாக கொண்டு செயல்பட்டு வருகின்றனர்.

பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். மூலம் எங்கெங்கு மக்களுக்கு தொல்லைகள், இன்னல்கள், வேதனைகள் கொடுக்கப்படுகிறதோ அங்கெல்லாம் காங்கிரஸ் கட்சி சார்பில் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. மத்திய பா.ஜ.க. அரசு புதிதாக எந்த ஒரு திட்டத்தையும் கொண்டுவரவில்லை. காங்கிரஸ் கட்சி ஆட்சிகாலத்தில் கொண்டு வரப்பட்ட திட்டங்களின் பெயர்களை மாற்றி மக்களை ஏமாற்றி வருகின்றனர்.

பிரதமரை துணிந்து எதிர்க்கும் முதல்-அமைச்சராக நமது முதல்-அமைச்சர் உள்ளார். நாட்டில் முதல் முதலாக பிரதமருக்கு எதிராக கண்டன குரல் வருகின்றது என்றால் அது புதுச்சேரியில் இருந்துதான்.

மக்கள் நலத்திட்டங்களுக்கு அனுமதி தந்தால் பணிந்து செல்லவும் தயாராக உள்ளோம். மக்கள் கொடுத்த வாய்ப்புகளை சரியாக பயன்படுத்துவோம். மக்கள் நலத்திட்டங்களை நிறைவேற்றவிடாமல் முட்டுக்கட்டை போட்டால் கவர்னரை எதிர்ப்போம். இடையூறுகளும், தடைகளும் வந்தால் எதிர்த்து போராடுவோம். 2019-ம் ஆண்டு ராகுல்காந்தி இந்திய பிரதமராக வருவது உறுதி. அனைத்து தடைகளையும் உடைத்தெறிவோம்.

இவ்வாறு அவர் பேசினார்.

அமைச்சர் கந்தசாமி, அகில இந்திய மகிளா காங்கிரஸ் பொதுச்செயலாளர் நக்மா, முன்னாள் எம்.எல்.ஏ. நீல.கங்காதரன் மற்றும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் விழாவில் கலந்து கொண்டனர். 

Next Story