மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து காவிரி ஆற்றில் மூழ்கி போராட்டம் நடத்தச்சென்ற 55 பேர் கைது
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து ஆற்றில் மூழ்கி போராட்டம் நடத்தச்சென்ற 55 பேரை போலீசார் கைது செய்தனர்.
ஈரோடு,
காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காத மத்திய அரசை கண்டித்து, அனைத்திந்திய உழவர் உழைப்பாளர் திராவிட முன்னேற்ற கழகத்தினர் சார்பில் நேற்று முன்தினம் ரெயில் மறியல் போராட்டம் நடந்தது. இதில் 73 பெண்கள் உள்பட மொத்தம் 115 பேர் கைது செய்யப்பட்டனர். பின்னர் மாலையில் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.
இந்த நிலையில் நேற்று அந்த கட்சியினர் சார்பில் ஈரோடு காவிரி ஆற்றில் மூழ்கும் போராட்டம் நடந்தது. இந்த போராட்டத்தில் கலந்து கொள்வதற்காக கட்சி தொண்டர்கள் நேற்று காலை ஈரோடு கருங்கல்பாளையம் பகுதியில் ஒன்று கூடினார்கள்.
போராட்டத்துக்கு நிறுவன தலைவர் ஜெ.ஜோதிகுமார் தலைமை தாங்கினார். மாநில பொதுச்செயலாளர் டி.தண்டாயுதபாணி, இளைஞர் அணி செயலாளர் மணிகண்டன், துணை பொதுச்செயலாளர் அஷ்சத் ஹபீஸ், மகளிர் அணி செயலாளர் நாச்சிசேகர் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள்.
கருங்கல்பாளையம் பகுதியில் ஒன்றுகூடிய அவர்கள் அங்கிருந்து காவிரி ஆற்றில் மூழ்குவதற்காக நடந்து சென்றனர். அப்போது காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காத மத்திய அரசை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பினார்கள்.
கருங்கல்பாளையம் சோதனை சாவடி அருகில் சென்றபோது, அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த டவுன் துணை போலீஸ் சூப்பிரண்டு ராதாகிருஷ்ணன் மற்றும் போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி கைது செய்தனர். 31 பெண்கள் உள்பட மொத்தம் 55 பேர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட அனைவரும் போலீஸ் வேனில் ஏற்றப்பட்டு கருங்கல்பாளையம் பகுதியில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர். மாலையில் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.
Related Tags :
Next Story