அனைத்து பள்ளிக்கூடங்களிலும் கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது: அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்
அனைத்து பள்ளிக்கூடங்களிலும் எந்த காரணம் கொண்டும் கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது என்று அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.
பவானி,
ஈரோடு மாவட்டம் பவானியில் நடந்த அம்பேத்கர் பிறந்தநாள் விழாவில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கலந்து கொண்டார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:-
மே மாதம் 2-ந்தேதி முதல் பள்ளிக்கூடங்களில் மாணவ-மாணவிகளின் சேர்க்கை நடைபெறும்.
இந்த கல்வி ஆண்டில் 1, 6, 9, 11-ம் வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டம் அறிமுகம் செய்யப்பட உள்ளது. ஜூன் மாதம் முதல் வாரத்திலேயே மாணவர்களுக்கு புத்தகங்கள் வினியோகம் செய்யப்படும். இந்த ஆண்டு இதுவரை 8 ஆயிரத்து 223 மாணவ-மாணவிகளுக்கு மடிக்கணினிகள் வழங்கப்பட்டு உள்ளது.
மத்திய அரசு கொண்டு வரும் எந்த ஒரு போட்டித்தேர்வாக இருந்தாலும் அதை மாணவ-மாணவிகள் எதிர்கொள்ளும் வகையில் தமிழகத்தில் 412 இடங்களில் பயிற்சி மையங்கள் தொடங்கப்பட்டு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இதில் 3 ஆயிரத்து 118 மாணவ-மாணவிகள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு 21 நாட்கள் சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
பள்ளி கல்வித்துறை சார்பில் வருகிற 21-ந்தேதி முதல் அனைத்து பள்ளிக்கூடங்களுக்கும் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. அரசு அறிவித்து உள்ளபடி அனைத்து தனியார் மற்றும் அரசு பள்ளிக்கூடங்களிலும் மாணவ-மாணவிகளுக்கு கட்டாயம் விடுமுறை அளிக்க வேண்டும். எந்த காரணத்தை கொண்டும் விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது.
ஏனென்றால் மாணவர்களின் புத்துணர்ச்சிக்கும், உறவுகளை புதுப்பித்து கொள்ளவும் அவர்களுக்கு ஒரு ஓய்வு வேண்டும் என்பதால் தான் இந்த கட்டாய விடுமுறை கொடுக்கப்பட்டு உள்ளது.
தனியார் பள்ளிக்கூடங்களில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இதற்காக ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்கப்பட்டு பள்ளிக்கூடங்கள் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.
விழாவில் இந்திய குடியரசு கட்சியின் மாவட்ட செயலாளர் மோகன்ராஜ், ஜெயலலிதா பேரவை ஒன்றிய செயலாளர் விஸ்வநாதன், முன்னாள் கவுன்சிலர் மோகன், பவானி கூட்டுறவு கைத்தறி சங்க தலைவர் பெரியசாமி, ஆவின் கூட்டுறவு சங்க தலைவர் சீனிவாசன் உள்பட பலர் கலந்து கொண்டார்கள்.
Related Tags :
Next Story