லஞ்சம் வாங்கியதாக மாவட்ட பத்திரப்பதிவு அலுவலர் மீது வழக்குப்பதிவு


லஞ்சம் வாங்கியதாக மாவட்ட பத்திரப்பதிவு அலுவலர் மீது வழக்குப்பதிவு
x
தினத்தந்தி 15 April 2018 4:00 AM IST (Updated: 15 April 2018 2:26 AM IST)
t-max-icont-min-icon

லஞ்சம் வாங்கியதாக விழுப்புரம் மாவட்ட பத்திரப்பதிவு அலுவலர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

விழுப்புரம்,

விழுப்புரம் மாவட்ட பத்திரப்பதிவுத்துறை அலுவலராக பணியாற்றி வருபவர் குமரேசன். இவர் சார் பதிவாளர் அலுவலகங்களில் நடைபெறும் சிறு, சிறு முறைகேடுகள் மற்றும் புகார்களை கண்டுகொள்ளாமல் இருப்பதற்காக மாதந்தோறும் சார்பதிவாளர்களிடம் இருந்து பணம் வாங்குவதாக விழுப்புரம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்கு புகார்கள் சென்றது.

இந்நிலையில் நேற்று முன்தினம் மாவட்ட பத்திரப்பதிவுத்துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர். 9 மணி நேரமாக நடந்த இந்த சோதனையின் முடிவில் குமரேசனிடம் இருந்து கணக்கில் வராத ரூ.92 ஆயிரத்து 630–ஐ போலீசார் கைப்பற்றியதோடு பல முக்கிய ஆவணங்களையும் லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்திற்கு எடுத்துச்சென்றனர்.

இதனை தொடர்ந்து நேற்று முன்தினம் இரவோடு இரவாக மாவட்ட பத்திரப்பதிவு அலுவலர் குமரேசன் மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து, கைப்பற்றப்பட்ட பணம் மற்றும் ஆவணங்கள் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

பத்திரப்பதிவு அலுவலர் குமரேசனின் வீடு கடலூர் மாவட்டம் வெளிச்செம்மண்டலம் ராஜீவ்காந்தி நகரில் உள்ளது. நேற்று காலையில் கடலூர் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் குமரேசன் வீட்டில் சோதனை நடத்துவதற்காக சென்றபோது, வீடு பூட்டி இருந்தது. பின்னர் அக்கம், பக்கத்தினரிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது வீட்டில் யாரும் இல்லை என்பது தெரியவந்தது. அலுவலகத்தில் இருந்து பணம் மற்றும் ஆவணங்களை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைப்பற்றியதால், தொடர்ந்து வீட்டுக்கும் வருவார்கள் என்ற அச்சத்தில் போலீசுக்கு பயந்து குமரேசன் வீட்டை பூட்டி சென்று இருக்கலாம் என கூறப்படுகிறது.

என்றாலும் அவரது வீட்டுக்கு யாராவது வந்து செல்கிறார்களா என போலீசார் ரகசியமாக கண்காணித்து வருகிறார்கள்.

Next Story