ஜனதாதளம்(எஸ்) 100-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெறும் குமாரசாமி பேட்டி


ஜனதாதளம்(எஸ்) 100-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெறும் குமாரசாமி பேட்டி
x
தினத்தந்தி 15 April 2018 3:00 AM IST (Updated: 15 April 2018 2:39 AM IST)
t-max-icont-min-icon

‘இந்தியா டுடே‘ நடத்திய கருத்து கணிப்பில் நம்பிக்கை இல்லை என்றும், ஜனதாதளம்(எஸ்) 100-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெறும் என்று குமாரசாமி தெரிவித்து உள்ளார்.

மைசூரு, 

‘இந்தியா டுடே‘ நடத்திய கருத்து கணிப்பில் நம்பிக்கை இல்லை என்றும், ஜனதாதளம்(எஸ்) 100-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெறும் என்று குமாரசாமி தெரிவித்து உள்ளார்.

நம்பிக்கை இல்லை

கர்நாடக சட்டசபைக்கு அடுத்த மாதம்(மே)12-ந் தேதி தேர்தல் நடக்க உள்ளது. இந்த நிலையில் ‘இந்தியா டுடே‘ என்ற பிரபல ஆங்கில செய்தி சேனல் கர்நாடக தேர்தல் பற்றி ஒரு கருத்து கணிப்பு நடத்தி அதன் முடிவுகளை வெளியிட்டது. அதில் கர்நாடக சட்டசபை தேர்தலில் ஆளும் காங்கிரஸ் 90 முதல் 101 தொகுதிகளிலும், பா.ஜனதா 78 முதல் 86 தொகுதிகளிலும், ஜனதாதளம்(எஸ்) 34 முதல் 43 தொகுதிகளிலும் வெற்றி பெற வாய்ப்பு உள்ளதாக கூறியுள்ளது.

இந்த நிலையில் மைசூருவில் நேற்று சுற்றுப்பயணம் செய்த ஜனதாதளம்(எஸ்) கட்சியின் மாநில தலைவரும், முன்னாள் முதல்-மந்திரியுமான குமாரசாமி டவுன் ஹாலில் பிறந்தநாளையொட்டி அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

கர்நாடக தேர்தல் பற்றி ‘இந்தியா டுடே‘ வெளியிட்டு உள்ள கருத்து கணிப்பில் எனக்கு நம்பிக்கை இல்லை. கடந்த முறை ஜனதாதளம்(எஸ்) வெறும் 2 இடங்களில் தான் வெற்றி பெறும் என்று இந்தியா டுடே தெரிவித்து இருந்தது. ஆனால் 48 இடங்களில் நாங்கள் வெற்றி பெற்றோம். இந்த முறை நாங்கள் 23 இடங்களில் வெற்றி பெறுவோம் என்று தெரிவித்து உள்ளது. ஆனால் நாங்கள் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெறுவோம்.

தோற்கடிக்க முடியாது

எங்களுக்கு கிங் ஆக விருப்பம். கிங் மேங்கர் ஆக விருப்பம் இல்லை. எங்களின் முழு முயற்சியால் மாநிலத்தில் இந்த முறை ஆட்சி அமைப்போம். நான் சாமுண்டீஸ்வரி தொகுதிக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுக்கவில்லை. எல்லா தொகுதிகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்து உள்ளேன்.

சாமுண்டீஸ்வரி தொகுதியில் எங்கள் கட்சி சார்பில் போட்டியிடும் ஜி.டி.தேவேகவுடாவை ஆதரித்து பிரசாரம் செய்ய உள்ளேன். அவர் வேட்பு மனு தாக்கல் செய்ததும் மாயாவதி, எனது தந்தை தேவேகவுடா ஆகியோர் பிரசாரம் செய்வார்கள். சித்தராமையா நான் போட்டியிட உள்ள தொகுதிகளில் ஒரு நாள் பிரசாரம் செய்து என்னை தோற்கடித்து விடுவேன் என்று கூறியுள்ளார். அவர் நான் போட்டியிடும் தொகுதிகளில் ஒரு மாதம் பிரசாரம் செய்தாலும் என்னை தோற்கடிக்க அவரால் முடியாது.

சட்டமன்ற தேர்தலில் நான் 2 தொகுதிகளில் போட்டியிட உள்ளேன். 18-ந் தேதிக்கு மேல் தீவிர பிரசாரத்தில் ஈடுபட உள்ளேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதனை தொடர்ந்து சாமுண்டீஸ்வரி தொகுதியில் ஜி.டி.தேவேகவுடா எம்.எல்.ஏ.வை ஆதரித்து குமாரசாமி பிரசாரம் செய்தார். அவருக்கு பொதுமக்கள், கட்சியின் தொண்டர்கள் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் எச்.டி.கோட்டை தாலுகாவில் ஜனதாதளம்(எஸ்) சார்பில் நடந்த மாநாட்டில் கலந்து கொண்ட குமாரசாமி ஜனதாதளம்(எஸ்) கட்சிக்கு ஆதரவு திரட்டினார். இந்த மாநாட்டில் ஏராளமான தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

Next Story