அம்பேத்கர் பிறந்தநாள் விழா: சிலைக்கு பல்வேறு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை


அம்பேத்கர் பிறந்தநாள் விழா: சிலைக்கு பல்வேறு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை
x
தினத்தந்தி 15 April 2018 4:15 AM IST (Updated: 15 April 2018 2:42 AM IST)
t-max-icont-min-icon

சேலத்தில் அம்பேத்கர் பிறந்தநாள் விழாவையொட்டி அவரது சிலைக்கு பல்வேறு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

சேலம்,

சட்டமேதை டாக்டர் அம்பேத்கரின் பிறந்தநாள் விழா நேற்று சேலம் மாவட்டம் முழுவதும் அரசியல் கட்சியினர் மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் கொண்டாடப்பட்டது. இதையொட்டி சேலம் தொங்கும் பூங்கா அருகில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு அ.தி.மு.க. சார்பில் சேலம் மாநகர் மாவட்ட செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான ஜி.வெங்கடாசலம் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் பன்னீர்செல்வம் எம்.பி., சக்திவேல் எம்.எல்.ஏ., முன்னாள் மேயர் சவுண்டப்பன், முன்னாள் எம்.எல்.ஏ. செல்வராஜூ, சேலம் கூட்டுறவு வீடு கட்டும் சங்க தலைவர் சதீஸ்குமார், மாநகர் மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் சரவணன் மற்றும் பகுதி செயலாளர்கள், முன்னாள் கவுன்சிலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

அதேபோல், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் வெங்கடாசலம், எஸ்.கே.செல்வம் ஆகியோர் தலைமையில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். இதில் அஸ்தம்பட்டி பகுதி செயலாளர் செங்கோட்டுவேல் உள்பட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

தி.மு.க.வின் மாவட்ட ஆதிதிராவிடர் நலக்குழு சார்பில் மாவட்ட அவைத்தலைவர் எஸ்.டி.கலையமுதன் தலைமையில் கட்சியினர் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் மாவட்ட பொருளாளர் சுபாஷ், தலைமை செயற்குழு உறுப்பினர் சூடாமணி, மாநகர செயலாளர் ஜெயக்குமார், குமாரசாமிப்பட்டி பகுதி செயலாளர் சாந்தமூர்த்தி, மகளிர் தொண்டரணி அமைப்பாளர் சங்கீதா நீதிவர்மன் உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். சேலம் மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் மாவட்ட தலைவர் ஜெயபிரகாஷ் தலைமையில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. மாவட்ட துணைத்தலைவர் பச்சப்பட்டி பழனிசாமி, பொதுக்குழு உறுப்பினர்கள் பாண்டியன், சாரதாதேவி, முன்னாள் தலைவர் ஆக்ஸ்போர்டு ராமநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதேபோல், பாரதீய ஜனதா கட்சி சார்பில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. மாவட்ட எஸ்.சி. அணி செயலாளர் செல்வம் தலைமையில் நடந்த இந்த நிகழ்ச்சியில் மாவட்ட தலைவர் கோபிநாத், முன்னாள் மாநில தலைவர் லட்சுமணன், கோட்ட இணை பொறுப்பாளர் அண்ணாதுரை, மாவட்ட இளைஞர் அணி துணைத் தலைவர் பாரதிஜெகன் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். சமத்துவ மக்கள் கட்சி சார்பில் மேற்கு மாவட்ட செயலாளர் மைக்கேல் தங்கராஜ் தலைமையில் கட்சி நிர்வாகிகள் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்தனர். இதில் எடப்பாடி தொகுதி செயலாளர் செங்கோடன், வீரபாண்டி தொகுதி செயலாளர் பெரியண்ணன், தெற்கு தொகுதி செயலாளர் மாதேஸ்வரி, சூரமங்கலம் பகுதி செயலாளர் பிரேம்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் சேலம் மேற்கு மாவட்ட தொழிற்சங்க தலைவர் பச்சனம்பட்டி சின்னையன் தலைமையில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் தொழிற்சங்க செயலாளர் அஜித் மற்றும் நிர்வாகிகள் சரவணன், சாமியப்பன், ராமன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் மாவட்ட செயலாளர் மோகன் தலைமையிலும், தமிழ்நாடு அருந்ததியர் சங்கம் சார்பில் மாநில தலைவர் ராஜேந்திரன் தலைமையிலும், சுதந்திர மக்கள் கட்சி சார்பில் நிறுவன தலைவர் முத்துசாமி தலைமையிலும் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப் பட்டது. 

Next Story