முலகால்மூரு தொகுதியில் எனது வெற்றியை திப்பேசாமியால் தடுக்க முடியாது ஸ்ரீராமுலு எம்.பி. பேட்டி


முலகால்மூரு தொகுதியில் எனது வெற்றியை திப்பேசாமியால் தடுக்க முடியாது ஸ்ரீராமுலு எம்.பி. பேட்டி
x
தினத்தந்தி 15 April 2018 3:00 AM IST (Updated: 15 April 2018 2:58 AM IST)
t-max-icont-min-icon

முலகால்மூரு தொகுதியில் எனது வெற்றியை திப்பேசாமியால் தடுக்க முடியாது என்று ஸ்ரீராமுலு எம்.பி. தெரிவித்துள்ளார்.

பெங்களூரு, 

முலகால்மூரு தொகுதியில் எனது வெற்றியை திப்பேசாமியால் தடுக்க முடியாது என்று ஸ்ரீராமுலு எம்.பி. தெரிவித்துள்ளார்.

ஸ்ரீராமுலுவுக்கு எதிர்ப்பு

கர்நாடக சட்டசபை தேர்தலில் சித்ரதுர்கா மாவட்டம் முலகால்மூரு தொகுதியில் பா.ஜனதா சார்பில் ஸ்ரீராமுலு எம்.பி. வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே அந்த தொகுதியில் பா.ஜனதாவை சேர்ந்த திப்பேசாமி எம்.எல்.ஏ.வாக இருந்து வருகிறார். இதனால் அவர் தனக்கு தான் அந்த தொகுதியில் போட்டியிட வாய்ப்பளிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார். மேலும் ஸ்ரீராமுலுக்கு எதிராக திப்பேசாமி, அவரது ஆதரவாளர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

நேற்று முன்தினம் ஸ்ரீராமுலுவின் கார் கண்ணாடியை திப்பேசாமியின் ஆதரவாளர்கள் கற்களை வீசி தாக்கி உடைத்தனர். இதுகுறித்து பல்லாரியில் நேற்று ஸ்ரீராமுலு எம்.பி.யிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள். இதற்கு பதிலளித்து அவர் கூறியதாவது:-

வெற்றியை தடுக்க முடியாது

முலகால்மூரு தொகுதியில் நான் போட்டியிட்டால் பா.ஜனதா வெற்றி பெறும் என்று கருதி, கட்சி தலைவர்கள் என்னை வேட்பாளராக நிறுத்தியுள்ளனர். இதற்கு திப்பேசாமி எதிர்ப்பு தெரிவிப்பது சரியல்ல. கோவில் முன்பாக எனக்கு எதிராக போராடியது, எனது கார் கண்ணாடியை உடைத்தது வேதனை அளிக்கிறது. முலகால்மூரு தொகுதியில் உள்ள 4 கிராம மக்கள் மட்டுமே திப்பேசாமிக்கு ஆதரவாக உள்ளனர். அவர்கள் தான் இந்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

ஆனால் நேற்று(நேற்று முன்தினம்) முலகால்மூரு தொகுதியில் நான் பிரசாரத்தில் ஈடுபட்ட போது, மக்கள் நல்ல வரவேற்பு அளித்தனர். என்னை தோற்கடிக்க போவதாக திப்பேசாமி கூறி வருகிறார். அவர் முடிந்தால் சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றி பெறட்டும். எனது வெற்றியை திப்பேசாமியால் தடுக்க முடியாது.

பின்வாங்க போவதில்லை

வால்மீகி சமுதாயத்தில் எனக்கு நல்ல பெயர் இருக்கிறது. என்னை அவமானப்படுத்துவது, வால்மீகி சமுதாயத்தையே அவமானப்படுத்துவது போல ஆகும். முலகால்மூரு தொகுதியில் நான் போட்டியிடுவதற்கு திப்பேசாமி எதிர்ப்பு தெரிவிப்பதை கண்டு அஞ்ச போவதில்லை.

முலகால்மூரு தொகுதியில் போட்டியிடும் முடிவில் இருந்து பின்வாங்க போவதில்லை. அந்த தொகுதியில் பா.ஜனதா வெற்றி பெற்றே தீரும். திப்பேசாமியும், அவரது ஆதரவாளர்களும் போராட்டத்தில் ஈடுபட்டு வருவது வருத்தம் அளிப்பதாக எனது நண்பரான ஜனார்த்தனரெட்டி சொன்னார்.

இவ்வாறு ஸ்ரீராமுலு கூறினார்.

Next Story