மாவட்டத்தில் 5,712 பயனாளிகளுக்கு ரூ.170 கோடியில் வீடுகள்: கலெக்டர் தகவல்


மாவட்டத்தில் 5,712 பயனாளிகளுக்கு ரூ.170 கோடியில் வீடுகள்: கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 15 April 2018 12:11 AM GMT (Updated: 15 April 2018 12:11 AM GMT)

திண்டுக்கல் மாவட்டத்தில் 5,712 பயனாளிகளுக்கு ரூ.170 கோடி செலவில் வீடு கட்டி கொடுக்கப்பட்டுள்ளது என கலெக்டர் டி.ஜி.வினய் கூறினார்.

திண்டுக்கல், 

திண்டுக்கல் அருகே உள்ள தாடிக்கொம்பு மற்றும் அகரம் பேரூராட் சிக்குட்பட்ட பகுதி களான பாப்பணம்பட்டி, கருங்கல்பட்டி, காமாட்சி புரம் காலனி, உண்டார்பட்டி, மறவப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட வளர்ச்சித்திட்ட பணிகள் குறித்து கலெக்டர் டி.ஜி.வினய் ஆய்வு செய்தார். அப்போது அந்த பகுதிகளில் புதிதாக கட்டப்பட்டு வரும் அங்கன்வாடி மையங்கள், சாலை, குடிநீர், மின்சார வசதி, கழிப்பறை, பசுமை வீடு கட்டும் பணி, நீர்நிலைகளை சீரமைத்தல் உள்ளிட்டவற்றை அவர் ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது கருங்கல்பட்டியில் புதிதாக கட்டப்பட்டு செயல்பட்டு வரும் அங்கன்வாடி மையத்தை கலெக்டர் பார்வையிட்டார். அப்போது, அங்கு குழந்தைகளுக்கு மதிய உணவு சமைத்து வைத்திருந்தனர். அது தரமானதாகவும், சுவையாகவும் உள்ளதா? என்பதை அறிய அந்த உணவை கலெக்டர் சாப்பிட்டு பார்த்தார். ஆய்வின் போது அவர் கூறியதாவது:-

மாவட்டம் முழுவதும் ரூ.2 கோடியே 92 லட்சம் செலவில் 45 அங்கன்வாடி மையங்கள் புதிதாக கட்டப்பட்டு வருகிறது. பேரூராட்சிகள் துறையின் மூலம் பசுமை வீடுகள் மற்றும் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ், திண்டுக்கல் மாவட்டத்தில் மொத்தம் 5 ஆயிரத்து 712 பயனாளிகளுக்கு ரூ.170 கோடியே 34 லட்சத்து 20 ஆயிரம் செலவில் வீடு கட்டி கொடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு கலெக்டர் தெரிவித்தார்.

இந்த ஆய்வின் போது, பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் குருராஜன் மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.

Next Story